இரவில் பால் குடிப்பதால் வரும் பிரச்சனைகள்!
பலரது இல்லங்களில் இரவில் உறங்க செல்வதற்கு முன்பு பால் காய்ச்சி கொடுப்பது வழக்கமான நடைமுறையாக இருக்கிறது. ஒரு சில படங்களில் கூட, குழந்தைகள் தூங்குவதற்கு முன்பு அவர்களுக்கு ஒரு டம்ளர் பால் கொடுக்கப்படுவது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கும்.
இதை பார்க்கும் பலர், இதனால் உடலுக்கு பல்வேறு சத்துகள் கிடைப்பதாக கருதுகின்றனர். இரவில் பால் குடிப்பது, நல்ல தூக்கத்திற்கு உதவும் என்றும் சொல்லப்படுகிறது. இது உண்மையா? இரவில் பால் குடிப்பதால் ஏற்படும் பின்விளைவுகள் என்ன? இங்கு பார்ப்போம்.
தூக்கம்:
ஒரு சிலருக்கு படுக்க செல்வதற்கு முன்னர் பால் குடிப்பது, நல்ல தூக்கத்திற்கு உதவும். ஆனால், இது அனைவருக்கும் பொருந்தாத்ஹு. ஒரு சிலருக்கு லாக்டோஸ் இண்டாலரண்ட் எனப்படும் பால் அலர்ஜி இருக்கும். இவர்களுக்கு, பால் மட்டுமல்ல, அது சம்பந்தப்பட்ட எந்த பொருள் சாப்பிட்டாலும் உடல் நிலையில் மாற்றம் ஏற்படும். செரிமான கோளாறில் இருந்து, வயிறு உப்பசம் ஆவது வரை பல்வேறு பக்க விளைவுகள் உண்டாகலாம். எனவே, இரவில் பால் குடிப்பதற்கு முன்னர் இதை கவனத்தில் கொள்வது நன்று.
அமில ரிஃப்ளக்ஸ்:
இரவில் தூங்குவதற்கு முன்பு பால் குடிப்பது நமது உடலில் அமில ரிஃப்ளக்ஸ் சுரப்பிக்களை தூண்டி விட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. காரணம், பாலில் கொழுப்பு மற்றும் புரதம் ஆகிய இரண்டும் இருக்கிறது. இது வயிற்றில் அமிலம் சுரக்க காரணமாக அமைகிறது. இதனால் நெஞ்செரிச்சல், இதயம் வேகமாக துடிப்பது போன்ற பிரச்சனைகள் உண்டாகலாம். இதனால் தூக்கமும் கெட்டுப்போகலாம்.
எடை அதிகரிப்பு:
பால், கலோரி நிறைந்த பானங்களுள் ஒன்றாகும். இரவு தூங்குவதற்கு முன்பு இதை குடிப்பது எடை அதிகரிப்பிற்கு காரணமாக அமையலாம் என மருத்துவ அறிக்கைகள் சில தெரிவிக்கின்றன எனவே, ஒரு நாளில் எடுத்துக்கொள்ள வேண்டிய கலோரி அளவிற்கு மேலான கலோரி, பாலில் இருந்தால் அதை குடிப்பதை தவிர்க்கவும்.
அலர்ஜி:
ஒரு சில பேருக்கு பால் குடிப்பதால் உடலில் அலர்ஜி ஏற்படலாம். பால் குடித்தவுடன் உடல் அரிப்பு, ஆங்காங்கே சிவப்பாவது, மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகவும்.
சளி:
ஒரு சிலர், இரவில் பால் குடிப்பதால் அவர்களுக்கு சளி பாதிப்பு ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர். இரவில் பால் குடிப்பதால் சிலருக்கு மூக்கடைப்பு அல்லது மூக்கில் சளி ஒழுகுதல் ஆகிய பாதிப்புகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, இந்த பாதிப்புகள் இரவு தூக்கத்தை கெடுக்கும் என்றும், தூக்க நிலையை கெடுத்து, மூச்சு விடுவதில் சிரமத்தையும் ஏற்படுத்துமாம்.
மருந்துகளுடன் தொடர்பு:
ஒரு சிலருக்கு அவர்களின் நாள்பட்ட நோய் பாதிப்பு காரணமாக அல்லது கால்சிய குறைபாடு காரணமாக தினசரி மருந்து-மாத்திரைகள் எடுத்துக்கொள்ளும் நிலை வரலாம். அப்படிப்பட்ட ஆட்கள், இரவில் பால் குடிப்பது, அவர்கள் சாப்பிடும் மருந்துடன் இணைந்து எதிர்விணை அறிகுறிகளை காண்பிக்கும் என கூறப்படுகிறது.