அனைத்து தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி!
சமூகங்களுக்கிடையேயான புரிந்துணர்வை வளர்ப்பதற்கும் அமைதியான முறையில் நாட்டை கட்டியெழுப்புவதற்கும் அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு தமிழ் மற்றும் முஸ்லிம் எதிர்க்கட்சிகள் ஆதரவளிக்க வேண்டும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற கூட்டத்தில் அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி அனைத்து மத மற்றும் கலாச்சார அடையாளங்களுக்கும் முழு மரியாதையுடன் வாழ ஒவ்வொரு குடிமகனும் சுதந்திரம் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அரசாங்கம் நாட்டை “எந்த வகையான இனவெறிப் பொறிக்குள்” இழுக்க அனுமதிக்காது எனக் கூறிய அவர், ஒற்றுமை மற்றும் சகவாழ்வை ஊக்குவிக்கும் தேசிய முயற்சியை ஆதரிக்க அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
இதேவேளை புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சினால் ஒருங்கிணைக்கப்படும் இலங்கை தினத்தின் நிறுவன அம்சங்கள் குறித்து இந்த கூட்டத்தின்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் குறித்த திட்டத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை தெரிவித்த பிரதிநிதிகள், அனைத்து இலங்கையர்களுக்கும் ஒரு பகிரப்பட்ட தளத்தை உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் முயற்சியைப் பாராட்டியுள்ளனர்.




