இலங்கையில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 50 மில்லியன் ரூபாய் ஒதுக்கிய ஜனாதிபதி
நாடளாவிய ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மோசமான காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகளுக்காக 50 மில்லியன் ரூபாவை ஒதுக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நிதி அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
உரிய நிவாரணங்களை மக்களுக்கு வழங்குவதற்கு நல்ல ஒருங்கிணைப்புடன் செயற்படுமாறு ஜனாதிபதி அரசாங்க அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.
அத்துடன், மோசமான காலநிலையை கருத்தில் கொண்டு வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள மக்களின் பாதுகாப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்தி, தேவையான உதவிகளை வழங்குமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளார். நிவாரண சேவைகளை வினைத்திறனாக நடைமுறைப்படுத்துவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக நாட்டில் ஏற்பட்டுள்ள மோசமான காலநிலை காரணமாக 11 மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவினால் 6,018 குடும்பங்களைச் சேர்ந்த 24,492 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
584 குடும்பங்களைச் சேர்ந்த 2,200 பேர் பாதுகாப்பாக 23 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்புப் படைகளின் பிரதானி அலுவலகத்தின் ஊடாக, அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் அரச அதிகாரிகளின் ஒருங்கிணைப்புடன் நிவாரணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அழைப்பு அறை 117 மற்றும் 0112136136, 0112136222, 0112670002 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு அவசர நிலைமைகள் தொடர்பான தகவல்களை அறிவிக்க முடியும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.