பிரான்ஸில் மரண தண்டனையை இல்லாதொழிக்கப் போராடிய அரசியல்வாதி காலமானார்
பிரான்ஸில் மரண தண்டனையை இல்லாதொழிக்கப் போராடிய மூத்த அரசியல்வாதி காலமானார்
பிரான்ஸின் சட்ட மன்றம் 1981ஆம் ஆண்டு மரணதண்டனையை இல்லாதொழிக்கும் சட்டத்தை வாக்களித்து நிறைவேற்றியது.
கடும் போராட்டத்தின் பின்னர் அந்தச் சட்ட மூலத்தைத் தயாரித்து அதனை மன்றில் நிறைவேற்றப் பாடுபட்டவர் அப்போதைய நீதி அமைச்சர் ரொபேர் பெடன்ரர் (Robert Badinter). அவர் தனது 95 ஆவது வயதில் காலமானார்.
பிரான்ஸில் மரண தண்டனையை இல்லாதொழித்த சட்டத்தின் சிற்பி எனப் புகழப்படுகின்ற அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.
ரொபேர் பெடன்ரரின் முயற்சியால் ஓகஸ்ட் 4,1982 நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டம் பிரான்ஸில் ஓரினச்சேர்க்கையைக் குற்றமாகக் கருதுவதை நீக்கியது. இன்று ஓரினச் சேர்க்கையாளர்கள் அனுபவிக்கின்ற சுதந்திரங்கள் அனைத்துக்கும் அன்றைய அவரது முயற்சியே வித்திட்டது.
அதிபர் மக்ரோன் தனது செய்தி ஒன்றில் ரொபேர் பெடன்ரரை, “இந்த நூற்றாண்டின் முக்கிய நபர்… குடியரசின் சாட்சி, பிரான்ஸின் ஆத்மா ” என்று வர்ணித்துள்ளார்.
நாடு ஓர் உயர்ந்த மனிதனை, சிறந்த சட்டவாளரை, மிகச் சிறந்த நீதி அமைச்சரை இழந்து விட்டது என்றும் மக்ரோன் தனது அஞ்சலிச் செய்தியில் தெரிவித்திருக்கிறார். ரொபேர் பெடன்ரருக்குத் தேசிய துக்க நிகழ்வு ஒன்றில் அரசு அஞ்சலி செலுத்தப்படும் என்றும் அவர் அறிவித்திருக்கிறார்.