ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக பொதுஜன பெரமுன மாறும்! மஹிந்த கட்சி உறுப்பினர் நம்பிக்கை
மாகாண சபைத் தேர்தல் நடக்கும்பட்சத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியே சபைகளில் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக மாறும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிவி சானக தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
“ மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துவதாக இருந்தால் பழைய முறைமையின்கீழ் அதனை செய்யலாம். நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் அதற்குரிய சட்டத்திருத்தத்தை நிறைவேற்றலாம்.
ஆனால் தேர்தல் நடத்தப்பட்டால் தமக்கு ஏற்படும் நிலை குறித்து அரசாங்கம் அஞ்சுகின்றது. அதனால்தான் எல்லை நிர்ணய விடயத்தைக் காண்பித்து இழுத்தடிப்பு இடம்பெறுகின்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு ஜனாதிபதிதேர்தலில் 2.5 சதவீத வாக்குகளை கிடைக்கப்பெற்றன. அதன்பின்னர் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அது 10 சதவீதமாக அதிகரித்தது.
எனவே, மாகாணசபைத் தேர்தல் நடைபெறும்பட்சத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வாக்கு வங்கி அதிகரிக்கும். மாகாணசபைகளில் முதலமைச்சர் உட்பட ஆட்சியை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக கட்சி மாறும்.” எனவும் டிவி சானக குறிப்பிட்டார்.





