பயணி வாந்தி எடுத்ததால் விமானம் அவசர அவசரமாக தரையிறக்கம்!
இந்தியாவின் மும்பை மாநகரிலிருந்து திங்கட்கிழமை இரவு ராஞ்சி நோக்கிச் சென்ற இண்டிகோ விமானம், நாக்பூர் நகரில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
பயணி ஒருவருக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டதையடுத்து, அவ்விமானம் நாக்பூரில் தரையிறங்கியது.
நீண்டநாள் சிறுநீரகக் கோளாற்றாலும் காசநோயாலும் பாதிக்கப்பட்டிருந்த அந்த 62 வயது ஆடவர் விமானத்திலேயே ரத்த வாந்தி எடுத்ததாகக் கூறப்பட்டது.
இதனையடுத்து, நாக்பூரிலுள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அப்பயணி, பின்னர் மாண்டுபோனதாகத் தெரிவிக்கப்பட்டது.
6E 5093 என்ற அவ்விமானம் மருத்துவக் காரணத்திற்காக நாக்பூரில் தரையிறக்கப்பட்டதாக இண்டிகோ நிறுவனப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
“விமானம் தரையிறங்கியபின், பாதிக்கப்பட்ட பயணி விரைவாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். ஆயினும், அவர் உயிர்பிழைக்கவில்லை. அவரது குடும்பத்தினர்க்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்,” என்று அப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.