அவர்கள் கொடுக்கும் வலியைவிட சமூகம் கொடுக்கும் வலி கொடுமையானது; முன்னாள் போராளி அரவிந்தன்
பொலிஸ், இராணுவம் கொடுக்கும் வலியைவிட சமூகம் கொடுக்கும் வலி கொடுமையானது என முன்னாள் போராளி செல்வநாயகம் அரவிந்தன் தெரிவித்தார். போராளிகள் நலன்புரிச்சங்கத்தின் முதலாவது அலுவலகமானது நேற்றையதினம் வவுனியாவில் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் உரையாற்றுகையிலே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து மேலும் கருத்து தெரிவிக்கையில்,தொடர்ந்தும் இன்றுவரை காயங்களோடு போராடி கொண்டிருக்கின்றவர்களுக்கான மருத்துவ உதவிகளை வழங்க வேண்டிய தேவை எங்களுக்கு இருக்கிறது. மரணமாகி மரணச்சடங்கினை செய்வதைவிட அவர்கள் வாழ்வதற்கான ஒரு விடயத்தை முன்னெடுக்க விரும்புகின்றோம்.
தற்போது இலங்கையிலே பதின்னான்காயிரத்திற்கு மேற்பட்ட புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகளும் கண்காணிப்பிலே இருக்கிறார்கள் என்று கூறக்கூடிய 5,000 தொடக்கம்6,000 போராளிகளும் அண்ணளவாக 20,000 போராளிகள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து இதே சமூகத்திலே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.இங்கே இருக்கின்ற போராளிகளில் நூற்றுக்கணக்கானவர்கள் மேலெழுந்து வந்திருந்தாலும் அனேகமானவர்கள் வறுமைக்கோட்டிற்கு கீழும், வாழ்வாதாரத்திற்காக போராடுகின்ற நிலைமை காணப்படுகின்றது.
அரசாங்கம் செய்ய வேண்டிய கடமையை போராளிகளுக்கு செய்யாததால் இன்றுவரை தமது வாழ்க்கைக்காக போராடிக்கொண்டு இருக்கின்ற சமூகமாகவே இருக்கின்றோம்.பொலிஸ், இராணுவம் அடக்குமுறைகள் அத்தோடு உளவியல் ரீதியான தாக்கத்தை விட சமூக ஒடுக்குதல்களாலே பாதிக்கப்படுகின்ற தன்மை வலி அதிகளவாகவே இருக்கின்றது. இராணுவம், பொலிஸ் திணைக்களங்களோடு போராடுகின்ற அதேநேரம் எங்களுடைய சொந்த மக்களோடும் , சமூகத்தோடும் போராடுகின்றவர்களாகவே இருந்து வருகின்றோம்.
எனவே இவ்வாறான ஒரு நிலையிலே எமது எதிர்காலம் எவ்வாறு இருக்கும் என்று சிந்திக்காமல் போராளிகளது நலனையும் , சமூகத்தினுடைய நலனையும் கருத்தில் கொண்டு போராளிகள் நலன்புரிச்சங்கத்தை ஆரம்பித்திருக்கின்றோம்.அனைத்து மாவட்டங்களிலும் காரியாலயம் திறந்து வைக்கப்படும் என்பதோடு எங்களுடைய பணி தமிழீழ விடுதலை புலிகளது கட்டமைப்பிலே என்னென்ன விடயங்கள் இருந்ததோ ஆயுதம் , போர் போன்ற விடயங்களை தவிர அவ்வளவு விடயங்களும் போராளிகள் நலன்புரி சங்கத்திலே உள்ளடக்கப்பட்டிருக்கின்றது என மேலும் தெரிவித்தார்.