ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு ஐஃபிள் கோபுரத்தில் காட்சிபடுத்தப்பட்டுள்ள ஒலிம்பிக் சின்னம்
ஒலிம்பிக் போட்டிகள் 2024 தொடங்க 50 நாள்கள் முன்னதாக ஜூன் 7ஆம் திகதி பாரிசின் ஐஃபிள் கோபுரத்தில் ஒலிம்பிக் சின்னமான ஐந்து வளையங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க 50 நாள்கள் உள்ள நிலையில் ஜூன் 7ஆம் திகதி, ஐஃபிள் கோபுரத்தில் பொருத்தப்பட்ட ஒலிம்பிக் சின்னமான ஐந்து வளையங்களை ஏற்பாட்டுக் குழுவினர் பொதுமக்கள் பார்வைக்குத் திறந்து வைத்தனர்.
மறுசுழற்சி செய்யப்பட்ட எஃகைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஐந்து வளையங்களை நான்கு பாரந்தூக்கிகளின் உதவியுடன் 30 ஊழியர்கள் ஐஃபிள் கோபுரத்தின் தென்பகுதியில் பொருத்தினர்.
‘இரும்புப் பெண்’ என்று அழைக்கப்படும் 135 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இக்கோபுரம் ஒலிம்பிக் போட்டிகளில் முக்கிய கவனத்தைப் பெறுகிறது.
இதன்கீழ் சில போட்டிகள் நடைபெறும் என்பதோடு இக்கோபுரத்திலிருந்து எடுக்கப்பட்ட சில எஃகுத் துண்டுகள் வெற்றியாளர்களுக்கான பதக்கங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11ஆம் திகதி வரை நடைபெறும்.
உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஆகஸ்டு 28 முதல் செப்டம்பர் 8ஆம் திகதி வரை இடம்பெறும்.
ஐஃபிள் கோபுரத்தில் பொருத்தப்பட்டுள்ள ஒலிம்பிக் வளையங்கள் ஒவ்வோர் இரவும் 100,000 எல்இடி விளக்குகளைக் கொண்டு ஒளியூட்டப்பட்டிருக்கும். உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடையும்வரை அவை ஒளிரும் எனக் கூறப்பட்டது.