படுக்கையில் கிடைத்த துண்டுச்சீட்டு: சாரா கொலை வழக்கில் வெளியாகியுள்ள புதிய தகவல்கள்!
பிரித்தானியாவில் வீடொன்றில் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட பாகிஸ்தான் வம்சாவளியினரான சாரா வழக்கில் பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆகஸ்ட் மாதம் 10ம் திகதி, அதிகாலை 2.47 மணிக்கு பாகிஸ்தானிலிருந்து பிரித்தானிய பொலிஸாருக்கு வந்த தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து, Woking என்னுமிடத்திலுள்ள வீடு ஒன்றிற்குச் சென்றுள்ளார்கள் பொலிஸார்.வீட்டுக்குள் நுழைந்த பொலிஸார், சிறுபிள்ளைகளுக்கான கட்டில் ஒன்றில் போர்வைக்கடியில் ஒரு சிறுமியின் உடல் இருப்பதைக் கண்டு உடனடியாக மருத்துவ உதவிக்குழுவினரை அழைத்துள்ளனர்.
சிறுமியை பரிசோதித்த மருத்துவ உதவிக்குழுவினர், அவர் உயிரிழந்துவிட்டதாக, அதிகாலை 4.00 மணியளவில் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், வழக்கில் இதுவரை வெளிவராத பல புதிய தகவல்கள் தற்போது நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
சாரா சடலமாகக் கண்டெடுக்கப்படுவதற்கு முந்தைய தினம், அவளது தந்தையான ஷெரீஃப் (41) அவரது இரண்டாவது மனைவியான பட்டூல் (29) மற்றும் ஷெரீஃபின் சகோதரரான மாலிக் (28) ஆகியோர், ஷெரீஃபின் ஐந்து பிள்ளைகளுடன் பாகிஸ்தானுக்குத் தப்பிச் சென்றுவிட்டார்கள். தற்போது அவர்கள் பிரித்தானியா திரும்பியுள்ள நிலையில், கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்கள் மீதான வழக்கு விசாரணை துவங்கியுள்ளது. இந்த வழக்கு விசாரணையில்தான் புதிய பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
சாரா, முழுமையாக உடை உடுத்தப்பட்டு, அவளது படுக்கையில் நேராக படுக்கவைப்பட்டிருக்கிறாள். அவளது தலையணையின் கீழ் இரண்டு துண்டுச்சீட்டுகள் கிடைத்துள்ளன. ஆனால், அதில் என்ன எழுதப்பட்டிருந்தது என்பதைக் குறித்த விவரம் வெளியாகவில்லை. மேலும், சாராவின் கொலையில் மூன்றாம் தரப்பினரின் பங்களிப்பு இருக்கலாம் என்றும் தற்போது அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
சாரா எதனால் உயிரிழந்தாள் என்பது இதுவரை தெளிவாகத் தெரிய வராத நிலையில், தற்போது வெளியாகியுள்ள தகவல்களிலிருந்து, சாரா கொலை தொடர்பில் மேலும் பல முக்கிய தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.