புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் சுவிட்சர்லாந்து வெளியிட்டுள்ள செய்தி…
சமீப காலமாக புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக சுவிட்சர்லாந்தில் எடுக்கப்பட்டுவரும் சில நடவடிக்கைகள், ஆச்சரியத்தை ஏற்படுத்துபவையாக உள்ளன.
அந்த வகையில் ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பின் அடிப்படையில், சுவிட்சர்லாந்தில் தற்காலிகமாக வாழ்வோர், அதாவது, F உரிமம் பெற்று (provisionally admitted foreigners) வாழ்வோருடைய குடும்பத்தினர், அவர்களுடன் சேர்ந்துகொள்ள மூன்று ஆண்டுகள் காத்திருக்கவேண்டும் என்ற நிலையை மாற்றி, இனி அவர்கள் இரண்டு ஆண்டுகள் மட்டுமே காத்திருந்தால் போதும் என்னும் வகையில் சட்டத்திருத்தம் ஒன்றைக் கொண்டுவர சுவிஸ் அரசு விரும்புவதாக ஒரு செய்தி வெளியானது.
புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக சுவிட்சர்லாந்து மேற்கொள்ளும் நடவடிக்கை ஒன்று குறித்து மீண்டும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. ஜூன் மாதம் 1ஆம் திகதி முதல், புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டோரும் ஆவணங்களற்ற புலம்பெயர்ந்தோரும் தொழிற்பயிற்சி பெறுவதற்கான நடைமுறை எளிதாக்கப்பட உள்ளது.
இப்போது, புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டோரும் ஆவணங்களற்ற புலம்பெயர்ந்தோரும் சுவிட்சர்லாந்தில் அடிப்படை தொழிற்பயிற்சி பெறவேண்டுமானால், அவர்கள் சுவிட்சர்லாந்தில் ஐந்து ஆண்டுகள் கட்டாய கல்வி பெற்றிருக்கவேண்டுமென்ற விதி உள்ளது. 2022ஆம் ஆண்டு, நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையோர், இந்த விதி கடுமையானது என கருத்து தெரிவித்ததையடுத்து இந்த விடயத்தில் ஒரு மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது.
அதன்படி, ஜூன் மாதம் 1ஆம் திகதியிலிருந்து, புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டோரும் ஆவணங்களற்ற புலம்பெயர்ந்தோரும் சுவிட்சர்லாந்தில் அடிப்படை தொழிற்பயிற்சி பெறவேண்டுமானால், அவர்கள் சுவிட்சர்லாந்தில் இரண்டு ஆண்டுகள் கட்டாய கல்வி பெற்றிருந்தால் போதும் என விதி மாற்றம் செய்யப்பட உள்ளது.