முல்லைத்தீவு நீதிபதி ஒரு மனநோயாளி; சரத் வீரசேகர மன்றத்தில் கருத்து
முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ஒரு மனநோயாளி. இவ்வாறானவரால் எவ்வாறு சரியான முறையில் செயற்பட முடியும். ஆகவே முல்லைத்தீவு நீதிமன்றத்துக்கு வேறொரு நீதிபதியை நியமிக்க வேண்டும் என்பதை நீதியமைச்சிடம் வலியுறுத்துகிறேன். குருந்தூர் மலையில் கை வைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். சிங்கள பௌத்தர்களின் பொறுமைக்கு எல்லையுண்டு. அதை கோழைத்தனம் என்று கருத வேண்டாம் என தேசிய பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (22) இடம்பெற்ற சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
குருந்தூர் மலையில் பொங்கல் பொங்கும் இந்து மத வழிபாட்டில் ஈடுபட முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார். தொல்பொருள் கட்டளைச்சட்டத்துக்கு எதிராகவே முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி செயற்படுகிறார். தொல்பொருள் கட்டளைசட்டத்தில் பௌத்தர்களின் மனங்களை பாதிக்கும் செயற்பாடுகளுக்கு இடமளிக்க கூடாது. அவ்வாறான செயற்பாடுகள் தண்டனைக்குரிய குற்றம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறான தெளிவான கட்டளைச்சட்டங்கள் காணப்படுகின்றன நிலையில் நீதிபதி தவறான கட்டளைகளை பிறப்பித்துள்ளமை பெரும் பிரச்சினையாக உள்ளது. கடந்த 18ம் திகதி குருந்தூர் மலைக்கு தமிழ் அரசியல்வாதிகளுடன் வருகை தந்த குண்டர்கள் அப்பகுதியில் இருந்த குருந்தூர் மலையின் விகாராதிபதி சாந்த போதி தேரரை தகாத வார்த்தைகளால் தூற்றி,வெளியேற்றியது முறையற்றது. இவ்வாறான செயற்பாடுகளினால் பௌத்தர்களின் மனம் பாதிக்கப்படாதா ?
நாங்கள் பொறுமையாக இருக்கிறோம், அந்த பொறுமையை கோழைத்தனம் என்று கருத கூடாது என்பதை தெளிவாக குறிப்பிட்டுக் கொள்கிறோம். தூர நோக்கற்ற வகையில் பிறப்பிக்கப்படும் கட்டளைகளினால் இனவாத முரண்பாடுகள் தோற்றம் பெறும். அவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றால் அதற்கு பொறுப்பான நீதிபதி, தமிழ் அரசியல்வாதிகள் பொறுப்புக்கூற வேண்டும்.
முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ஒரு மனநோயாளி என்றும் அவரை தான் மனநோய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதாகவும் குறித்த நீதிபதியின் மனைவி முல்லைத்தீவு பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார். ஆகவே நீதிபதி மனநோயாளி என்றால் அவர் குணமடைய நாங்களும் உதவி புரிவோம்.மனநோயால் பாதிக்கப்பட்டுள்ள ஒருவர் எவ்வாறு நீதிபதியாக செயற்பட முடியும் என்பது பிரச்சினைக்குரியதாக உள்ளது. இவர் பௌத்தர்களுக்கு இடமளிக்கமாட்டார் ஆனால் பொங்கல் பொங்குவதற்கு இடமளிப்பார். சரியான தீர்மானத்தை இந்த நீதிபதியால் எடுக்க முடியாது. ஏனெனில் அவர் ஒரு மனநோயாளி.
இனவாத கொள்கையற்ற தமிழ் நீதிபதிகள் பலர் நாட்டில் உள்ளார்கள். ஆகவே அவர்களை முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க வேண்டும். எம்மத்தியில் இனவாதம், மதவாதம் கிடையாது. இல்லாத முரண்பாடுகளை தோற்றுவிக்க வேண்டாம் என்பதை தமிழ் அரசியல்வாதிகளிடம் கேட்டுக் கொள்கிறேன்.
குருந்தூர் மலையில் கை வைப்பதை அடிப்படைவாதிகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் சிங்கள பௌத்தர்களின் பொறுமைக்கும் எல்லையுண்டு. தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன். எனது உரைக்கு பின்னர் எனக்கு எதிராக இலங்கை சட்டத்தரணிகள் செயற்படுவதை விடுத்து உண்மையான பிரச்சினைக்கு தீர்வு காண பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்பதையும் குறிப்பிட்டுக் கொள்கிறேன் என்றார்.