உலகளவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாரிஸ் ஒலிம்பிக் போட்டி இன்று ஆரம்பம்
33வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இன்று (வெள்ளிக்கிழமை) கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது.
இதில் 206 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். 32 வகையான விளையாட்டுகளில் மொத்தம் 329 போட்டிகள் நடத்தப்படுகிறது.
பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழா சென் நதியில் இந்திய நேரப்படி நாளை இரவு 11 மணிக்கு அரங்கேறுகிறது.
இதுவரை இல்லாத ஒரு அம்சமாக இந்த முறை தொடக்க விழா அரங்கத்திற்கு வெளியே, பாரீஸ் நகரில் பாய்ந்தோடும் சென் நதியில் வித்தியாசமான முறையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொடக்க விழா அணிவகுப்பில் வீரர், வீராங்கனைகள் ஏறக்குறைய 100 படகுகளில் 6 கிலோமீட்டர் பயணிக்க இருக்கிறார்கள்.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டி மொத்தம் 35 ஸ்டேடியங்களில் நடக்கிறது. இந்த போட்டியை நேரில் பார்ப்பதற்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் நடந்து வருகிறது. இதுவரை 90 லட்சதுக்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்பனையாகி இருக்கின்றன.