ஜெர்மனியில் குறைந்தபட்ச ஊதியத்தில் அடுத்த ஆண்டு ஏற்படவுள்ள மாற்றம்
ஜெர்மனியில் அடுத்த வருடத்திலிருந்து குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துவதற்கு ஜெர்மன் கூட்டாட்சி அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் குறைந்தபட்ச ஊதியம் மணிநேரத்திற்கு 12.82 யூரோவிலிருந்து 13.90 யூரோவாக அதிகரிக்க உள்ளது.
மேலும், ஜனவரி 2027 ஆம் ஆண்டில் இது மணிநேரத்திற்கு 14.60 யூரோ உயரும். 2015 இல் குறைந்தபட்ச ஊதியம் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இதுவே மிகப்பெரிய அதிகரிப்பு ஆகும்.
தொழிற்சங்கங்கள், தொழில் வழங்குநர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய குறைந்தபட்ச ஊதிய ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் இந்த மாற்றம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் சுமார் ஆறு மில்லியன் தொழிலாளர்கள் இந்த ஊதிய உயர்வால் பயனடைவார்கள். அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவைச் சமாளிக்க இது அவர்களுக்குச் சிறிய நம்பிக்கையை அளிக்கும்.
இந்த அதிகரிப்பால், தொழில் வழங்குநர்கள் பதிவு வைத்தல் மற்றும் தணிக்கை விதிகள் தொடர்பான புதிய விதிமுறைகளை எதிர்கொள்ள நேரிடலாம்.
புதிய விதிகளைப் பின்பற்றத் தவறும் வணிகங்கள் சட்டச் சிக்கல்களையோ அல்லது பெரிய அபராதங்களையோ சந்திக்க நேரிடும்.
இந்த நடவடிக்கைகள் நியாயமான ஊதியங்களையும் சிறந்த பணிச்சூழலையும் உறுதி செய்வதோடு, ஊதிய அமைப்பில் வெளிப்படைத்தன்மையைப் பேணுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.





