தாய்லாந்தில் முடிவுக்கு வந்த ராணுவ ஆட்சி… எதிர்க்கட்சிகள் கூட்டாக ஆட்சியமைக்க திட்டம்
தாய்லாந்து நாட்டில் 2006ம் ஆண்டு பிரதமர் தக்சின் ஷினவத்ரா தலைமையிலான ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து அதிகாரத்தில் இருந்து ஷினவத்ரா தூக்கி எறியப்பட்டார்.இதன்பின், 2014ம் ஆண்டு ஷினவத்ராவின் உறவு முறையை சேர்ந்த யிங்லங் ஷினவத்ராவின் ஆட்சியும் கவிழ்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து, ராயல் தாய் ஆயுத படைகளின் தலைவராக செயல்பட்ட பிரயுத் சான்-ஓ-சா ஆட்சியை கைப்பற்றினார். இதனால், 2 தசாப்தங்களில் இரண்டு முறை ஆட்சி கவிழ்ப்பை தாய்லாந்து சந்தித்து உள்ளது.
அதன்பின், தாய்லாந்து நாட்டில் 9 ஆண்டு கால ராணுவ ஆட்சி நடைபெற்றது. இந்த நிலையில், அந்நாட்டின் இளைஞர்கள் கடந்த 2020ம் ஆண்டு பெரிய அளவில் ஜனநாயக ஆதரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். 2014ம் ஆண்டு ராணுவ சதியால், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கவிழ்க்கப்பட்ட பின் 2வது முறையாகவும் இளைஞர்களின் பெரும் போராட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் ராணுவ தலைவர் மற்றும் ஆட்சி கவிழ்ப்பு சதியில் ஈடுபட்ட பிரயுத் சான்-ஓ-சா என்பவரை வீழ்த்தும்படி வாக்காளர்களிடம் இளைஞர்கள் கேட்டு கொண்டனர்.
இந்த நிலையில், தாய்லாந்தில் பிரதமர் தேர்தல் நடத்த முடிவானது. இதன்படி, தாய்லாந்து நாட்டில் பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று காலை தொடங்கி மாலை 5 மணி வரை நடந்தது. இதனை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. நேற்று இரவு முடிவு அறிவிக்கப்பட கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த தேர்தலில் மூவ் பார்வர்டு என்ற கட்சியானது, தொகுதி வாரியாக மற்றும் கட்சி வாரியாக என இரண்டின் அடிப்படையிலும் முன்னணியில் உள்ளது. இதனை தொடர்ந்து, பியு தாய் கட்சி மற்றும் பும்ஜெய்தாய் கட்சி ஆகியன உள்ளன. இந்த தேர்தலில், 2006ம் ஆண்டு நடந்த ஆட்சி கவிழ்ப்பின்போது, அதிகாரத்தில் இருந்து எறியப்பட்ட தக்சின் ஷினவத்ராவின் மகளான பீதாங்தரன் ஷினவத்ரா (36) பிரதமர் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
இதேபோன்று, தொழிலதிபர் ஷரெத்தா தவிசின் மற்றும் முன்னாள் நீதி மந்திரி சாய்காசிம் நிதிஸ்ரீ ஆகியோரும் பிரதமர் பதவிக்கு போட்டியிடுகின்றனர். பீதாங்தரன் ஷினவத்ராவின் தந்தை, ஆட்சியில் இருந்து 2006ம் ஆண்டு வெளியேற்றப்பட்டது போன்றே, 2014ம் ஆண்டில் அவரது உறவினரான யிங்லக், சர்ச்சைக்குரிய கோர்ட்டு உத்தரவின்படி வெளியேற்றப்பட்டதும், ஆட்சியை சான்-ஓ-சா கைப்பற்றி கொண்டார். அதனால், அவரை பழிவாங்கும் வகையில் இந்த தேர்தலில், ஷினவத்ரா போட்டியிடுகிறார் என கூறப்படுகிறது. இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை முடிவில் அதிக இடங்களை கைப்பற்றி உள்ள தாய்லாந்தின் இரு முக்கிய எதிர்க்கட்சிகளான மூவ் பார்வர்டு மற்றும் பியு தாய் ஆகிய கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு இன்று ஒப்புதல் அளித்து உள்ளன.
இதனால், ஏறக்குறைய ஒரு தசாப்தம் வரை ஆட்சி செய்து வரும் ராணுவ ஆட்சிக்கு முடிவு ஏற்பட கூடிய சூழல் எழுந்து உள்ளது. ராணுவ ஆட்சிக்கும், அதன் கூட்டணியினருக்கும் எதிர்மறையான முடிவுகள் வெளிவந்த போதிலும், அவர்கள் தரப்புக்கு சாதகம் ஏற்படும் வகையில் நாடாளுமன்ற விதிகள் உள்ளன. சில செல்வாக்கு வாய்ந்த சக்திகளும் அவர்களின் பின்னணியில் உள்ளன. இதனால், தாய்லாந்தில் புதிய அரசை வடிவமைப்பது பற்றி ராணுவத்தினர் தீர்மானிக்க முடியும் என்ற நிலை காணப்படுகிறது. மூவ் பார்வர்டு கட்சியின் தலைவரான 42 வயது பீடா லிம்ஜாரோயென்ரத், 6 கட்சிகளின் கூட்டணியை அமைக்க முன்வந்து உள்ளார். இதனால், 309 சீட்டுகள் மொத்தம் கைவசம் இருக்கும். எனினும், பிரதமராக பதவி வகிக்க 376 சீட்டுகள் தேவை என்ற பட்சத்தில் இன்னும் வேறு சில கட்சிகளின் ஆதரவும் தேவைப்படுகிறது.
இதில் மற்றொரு எதிர்க்கட்சியாக பியு தாய் உள்ளது. அக்கட்சி, பீடா பிரதமர் ஆவதற்கான முயற்சிகளுக்கு ஒப்புதல் அளித்து, அவருக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்து உள்ளது. தேர்தல் முடிவு பற்றி பீதாங்தரன் ஷினவத்ரா கூறும்போது, மூவ் பார்வர்டு கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். எனினும், அதிகாரப்பூர்வ முடிவு வெளிவரும் வரை காத்திருக்கிறோம். அவர்களுடன் இணைந்து பணியாற்றுவோம் என கூறியுள்ளார். இதனால், ராணுவ ஆட்சிக்கு பதிலாக தாய்லாந்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி அரசு அமைவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து காணப்படுகிறது.