பிரெஞ்சு மக்களுக்கு பிரான்ஸ் அரசாங்கத்தின் முக்கிய கோரிக்கை!
ஈரானில் தங்கியிருக்கும் பிரஞ்சு மக்களை உடனடியாக நாட்டைவிட்டு வெளியேறுமாறு பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது
பாலஸ்தீனிய ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் தலைவரான Ismaïl Haniyeh ஈரானின் தலைநகரமான தெஹ்ரானில் வைத்து கடந்த புதன்கிழமை படுகொலை செய்யப்பட்டார்.
இதனையடுத்து மத்திய கிழக்கில் கடும் பதட்டம் நிலவிவருகிறது. இஸ்ரேலுக்கும், பலஸ்தீனத்திற்க்கும் இடையே நடந்துவந்த போர் இப்போது இஸ்ரேல், ஈரான், லெபனான், சிரியா, ஈராக் மற்றும் யேமன் ஆகிய நாடுகளில் பரவும் ஆபத்து மத்திய கிழக்கில் நிலவுகிறது.
இந்த நிலையில் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சு ஈரானில் தங்கியிருக்கும் பிரஞ்சு மக்களை உடனடியாக நாட்டைவிட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன், அதுவரை மிகப்பெரிய விழிப்புணர்வைக் கடைப்பிடிக்குமாறும், அனைத்து ஆர்ப்பாட்டங்களிலிருந்தும் விலகியிருக்குமாறும், நிலைமைகளையும், அறிவுறுத்தல்களையும் பெறுவதற்கும் தூதரக வலைத்தளத்தை தவறாமல் பார்வையிடுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அதேவேளை ஈரான், லெபனான், சிரியா, ஈராக் மற்றும் யேமன் நாடுகளுக்கான பயணங்களை அனைத்து பிரஞ்சு மக்களும் கைவிடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதிவேளையில் ஒலிம்பிக் போட்டிகளுக்காக பிரான்சில் தங்கி இருக்கும் குறித்த நாடுகளின் வீரர்களுக்கு பாதுகாப்புகள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது எனவும் தெரியவருகிறது.