டொனால்ட் ட்ரம்ப் சந்திக்கும் கடைசித் தேர்தல் – எலான் மஸ்க்
அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசுக் கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பும் போட்டியிடுவதாக இருந்தது. ஆனால் பல காரணங்களால் போட்டியிலிருந்து ஜோ பைடன் விலகினார்.
பின்னர் ஜனநாயக கட்சி சார்பில், இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. கமலா ஹாரிஸ் போட்டியில் நுழைந்ததிலிருந்து அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியது.
ஜோ பைடன் போட்டியில் இருந்தபோது, ட்ரம்ப்தான் வெற்றிப் பெறுவார் என கூறப்பட்ட நிலையில், கமலா ஹாரிஸ் வந்தவுடன் ட்ரம்புக்கு பின்னடைவு ஏற்பட்டதாக அமெரிக்க அரசியல் கருத்து கணிப்பாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்தத் தேர்தலில் ட்ரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் இருவருக்கும் பல்வேறு பிரபலங்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். அந்த வகையில் தொடக்கத்திலிருந்தே முன்னாள் அதிபர் ட்ரம்புக்கு பிரபல தொழிலதிபரும், எக்ஸின் உரிமையாளருமான எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில் பிரபல செய்தி நிறுவனத்தின், முன்னாள் செய்தி தொகுப்பாளர் டக்கர் கார்ல்சனுடனான எலான் மஸ்க்கின் நேர்காணல் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது.
பென்சில்வேனியா மாகாணத்தில் நடைபெற்ற தேர்தல் பேரணியை தொடர்ந்து இந்த பேட்டி வெளிவந்துள்ளது.
இதில் எலான் மஸ்க், இந்தத் தேர்தலில் ட்ரம்ப் வெற்றிபெறவில்லை என்றால், அதுவே அவர் சந்திக்கும் கடைசித் தேர்தல் என்பது எனது கருத்து. சட்டவிரோதமானவர்கள் அல்லது புலம்பெயர்ந்தவர்கள் ஒரு சில முக்கிய மாநிலங்களுக்கு வேண்டுமென்றே கொண்டு செல்லப்படுகின்றனர்.
எனது கணிப்பு என்னவென்றால், அடுத்த 4 ஆண்டுகளுக்கு ஜனநாயக கட்சியினர் இருந்தால், சட்டவிரோதமானவை அனைத்தையும் சட்டபூர்வமானதாக மாற்றுவர்.” என எலான் மஸ்க் தெரிவித்தார்.
அமெரிக்காவைப் பொறுத்தவரை ஸ்விங் ஸ்டேட்களில் யார் அதிக வாக்குகளைப் பெறுகிறார்களோ அவர்கள் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு இருக்கிறது.
அந்த வகையில் முக்கியமான ஸ்விங் மாகாணங்களாக இருக்கும் விஸ்கான்சின், பென்சில்வேனியா மற்றும் மிச்சிகன் ஆகிய மாகாணங்களில் ட்ரம்பை பின்னுக்குத் தள்ளி கமலா ஹாரிஸ் கருத்துக் கணிப்புகளில் முன்னிலை பெற்றுள்ளார்.