அனைத்துலக நீதிமன்ற வழக்கறிஞரின் முடிவு அபத்தமானது – பிரதமர் நெதன்யாகு கண்டனம்
தமக்கும் தமது தற்காப்பு அமைச்சருக்கும் கைதாணை பிறப்பிக்கும் முயற்சியை அனைத்துலக நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் மேற்கொண்டது வேடிக்கையானது என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு கூறியுள்ளார்.அம்முயற்சி, ஒட்டுமொத்த இஸ்ரேலையும் குறிவைக்கும் ஒன்றாகும் என்று அவர் சாடினார்.
“ஹேக்கில் உள்ள வழக்கறிஞர் ஒருவர், ஜனநாயக நாடான இஸ்ரேலைப் பலரைக் கொல்லும் ஹமாஸ் அமைப்புடன் ஒப்பிடுவது எனக்கு அருவருக்கத்தக்க வகையில் உள்ளது, அதை நான் மறுக்கிறேன்,” என்று திரு நெட்டன்யாகு கண்டனம் தெரிவித்தார்.
“இது உண்மையை முழுமையாக மாற்றுவதாகும்,” என்றும் அவர் சாடினார். முன்னணி இஸ்ரேலிய, ஹமாஸ் தலைவர்களுக்குக் கைதாணை பிறப்பிப்பதற்கு விண்ணப்பித்துள்ளதாக அனைத்துலக நீதிமன்ற வழக்கறிஞர் கரிம் கான் திங்கட்கிழமையன்று (20) தெரிவித்தார்.
நெதர்லாந்தின் ஹேக் நகரில் உள்ள அனைத்துலக நீதிமன்றத்தின் முடிவுக்குத் தாங்களும் பெரும் கண்டனம் தெரிவிப்பதாக ஹமாஸ் குறிப்பிட்டது.
சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் திகதி ஹமாஸ், எதிர்பாரா விதத்தில் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. அந்தத் தாக்குதல் 1,170க்கும் அதிகமானோரைப் பலிவாங்கியது.காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்ட பதில் நடவடிக்கைகளில் குறைந்தது 35,562 பேர் இறந்தனர். இறந்தவர்களில் பெரும்பாலோர் பொதுமக்கள் என்று காஸாவில் ஹமாசின் தலைமையிலான சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, மேற்குக் கரையில் உள்ள ஜெனின் நகரின்மீது இஸ்ரேலிய ராணுவம் படையெடுத்தது. அதனால் குறைந்தது 7 பாலஸ்தீனர்கள் இறந்து விட்டதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்தது. இறந்தவர்களில் மருத்துவர் ஒருவரும் அடங்குவார் என்றும் அது சொன்னது. மேலும் ஒன்பது பேர் காயமுற்றனர்.
பாலஸ்தீன சுகாதார அமைச்சு இந்த விவரங்களை வெளியிட்டதாக அதன் செய்தி நிறுவனமான வாஃபா தெரிவித்தது.இந்நடவடிக்கை, பயங்கரவாதிகளுக்கு எதிரானது என்றும் ஆயுதம் ஏந்திய பாலஸ்தீனர்கள் பலர் சுடப்பட்டனர் என்றும் இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.