துன்பத்தில் இலங்கைக்கு தோள் கொடுத்த தமிழக மறுவாழ்வு முகாம் தமிழர்களின் பேருதவி
The great help of Tamils living in the Tamil Nadu rehabilitation camp who gave their shoulder to Sri Lanka in distress
டிட்வா புயலைத் தொடர்ந்து இலங்கையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தமிழ்நாட்டில் உள்ள மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கையர்கள் இரண்டு கொள்கலன் நிவாரணப் பொருட்களையும், நிதி உதவியையும் வழங்கியுள்ளனர்.
இலங்கை மக்களுடன் தங்களின் வலுவான ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில், தமிழ்நாட்டில் உள்ள மறுவாழ்வு முகாம்களில் மீள்குடியேற்றப்பட்ட இலங்கையர்கள், டிட்வா புயலைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு, இரண்டு 20 அடி கொள்கலன் அளவிற்கு அத்தியாவசிய நிவாரணப் பொருட்களையும், கணிசமான நிதி உதவியையும் நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
இந்த நிவாரண உதவிகள், மீள்குடியேற்றப்பட்ட இலங்கை சமூகத்தின் பிரதிநிதிகளால் சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தில் முறையாக கையளிக்கப்பட்டது.
இந்த நிவாரண பொருட்கள் சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட உள்ளன.
பொருள் உதவிகளுக்கு மேலதிகமாக, மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கையர்கள் தாமாக முன்வந்து, ஒருங்கிணைந்த முயற்சிகள் வாயிலாக 12,33,604 இந்திய ரூபாய் நிதிப் பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
இது இலங்கை ரூபாயில் சுமார் 42,50,000 க்கு சமமானதாகும்.
நிவாரண பொருட்கள் கையளிக்கப்பட்டபோது, துணைத் தூதரகத்தில் பெருமளவிலான இலங்கை சமூகப் பிரதிநிதிகள் இணைந்திருந்தனர்.
இந்தச் சந்தர்ப்பத்தில், தங்களின் நிவாரண உதவிகளை இலங்கைக்கு ஒருங்கிணைத்து அனுப்புவதற்கு எடுத்த முயற்சிகளுக்காக துணைத் தூதரகத்திற்கு அவர்கள் தங்கள் நன்றியைத் தெரிவித்தனர்.
இந்த கடினமான காலகட்டத்தில் வெள்ளச் சூழ்நிலையைச் சமாளிக்கவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவளிக்கவும் இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள உடனடி நடவடிக்கைகளுக்கு அவர்கள் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
இந்த உதவிகள், பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு முறையாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் சென்றடையும் என்பதில் இலங்கை
அரசாங்கத்தின் மீது தங்களுக்கு நம்பிக்கை இருப்பதாகவும் பிரதிநிதிகள் மேலும் தெரிவித்தனர்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 106 மறுவாழ்வு முகாம்களில் சுமார் 60,000 இலங்கையர்கள் வசிக்கின்றனர்.
மேலும் 40,000 மீள்குடியேற்றப்பட்ட இலங்கையர்கள் முகாம்களுக்கு வெளியே பொலிஸில் பதிவு செய்துகொண்டு வாழ்கின்றனர்.
இடம் பெயர்வதால் ஏற்படும் சவால்கள் இருந்தபோதிலும், இந்த சமூகங்கள் இலங்கையில் பேரழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக கூட்டாக நிவாரண உதவிகளைத் திரட்டிய செயலானது, அனைவரின் மனதினை நெகிழச் செய்துள்ளது.





