டிட்வா பாதிப்புகளிலிருந்து மக்களை மீட்க அரசாங்கம் போதிய நிதியை ஒதுக்கியுள்ளது – ஆளுநர் வேதநாயகன்
டிட்வா புயல் இடர் பாதிப்புகளிலிருந்து மக்களை மீட்டு, பிரதேசத்தை மீளக்கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் போதிய நிதியை ஒதுக்கியுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
அந்த பணிகளை மிகச் சிறப்பாகக் கையாண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் 2026ஆம் ஆண்டுக்கான முதலாவது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இன்று செவ்வாய்க்கிழமை (27.01.2026) முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் இணைத்தலைவராக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“2026 ஆம் ஆண்டு வடக்கை பொறுத்தவரை ஒரு ‘அபிவிருத்தி ஆண்டாக’ அமையவுள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் இவ்வாண்டு அதிகளவான அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
மாகாண சபையின் வழமையான நிதி ஒதுக்கீடுகளுக்கு மேலதிகமாக, மத்திய நிரல் அமைச்சுக்கள் ஊடாகவும் எமக்குக் கூடுதலான நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப்பெறவுள்ளன.
ஒதுக்கப்பட்ட நிதிகளை விட, மேலதிகத் திட்டங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம் மேலும் நிதியைப் பெற்றுக்கொள்ள முடியும்” என்றார்.





