போதை தலைக்கேறி கல்லூரி மாணவனைக் கொன்று புதைத்த நண்பர்கள்!
உத்தரப்பிரதேசத்தில் கல்லூரி மாணவரை அடித்துக் கொலை செய்து புதைத்த நண்பர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டா பல்கலைக் கழகத்தில் பிபிஏ முதலாம் ஆண்டு படித்தவர் யஷ் மிட்டல். கடந்த பிப்ரவரி 27ம் திகதி கல்லூரிக்குச் சென்ற யஷ் மிட்டல் அதன் பின் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து கிரேட்டர் நொய்டா காவல் நிலையத்தில் யஷின் தந்தை பிரதீப் மிட்டல் புகார் செய்தார். இதன் பேரில் பொலிஸார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அத்துடன் தனிப்படைகளை அமைத்து யஷ் மிட்டலைத் தேடி வந்தனர்.
இந்த நிலையில் பல்கலைக்கழகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை தனிப்படை பொலிஸார் ஆய்வு செய்தனர். அப்போது செல்போனில் பேசிக்கொண்டே யஷ் மிட்டல் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறியது பதிவாகியிருந்தது. இதையடுத்து யஷ் செல்போன் அழைப்புகளை பொலிஸார் ஆய்வு செய்தனர்.
அப்போது ரச்சித் என்பவருடன் யஷ் மிட்டல் பேசியது தெரிய வந்தது. இதையடுத்து அவரை பிடித்து பொலிஸார் விசாரணை நடத்தினர். அப்போது அதிர்ச்சிகரமான பல தகவல்கள் வெளியாகின.
அதில், யஷ் மிட்டல் தனது நண்பர்களுடன் பிப்ரவரி 26ம் திகதி கஜ்ரௌலாவில் நடந்த பார்ட்டிக்குச் சென்றுள்ளார். அன்று அம்ஹோரா திக்ரியா பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்குச் சென்று நண்பர்களுடன் சேர்ந்து யஷ் மிட்டல் மது அருந்தியுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது யஷ் மிட்டலை அவரது நண்பர்கள் அடித்துக் கொலை செய்துள்ளனர். அத்துடன் அவரது உடலை வயல்வெளியில் குழி தோண்டி புதைத்துள்ளனர்.
இக்கொலையை மறைப்பதற்காக யஷ் மிட்டலின் செல்போனை பயன்படுத்தி அவரது தந்தைக்கு குறுஞ்செய்தி அனுப்பியதும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து வயல் பகுதியில் புதைக்கப்பட்ட யஷ் மிட்டலின் உடலை தாத்ரி காவல் நிலையம் மற்றும் ஸ்வாட் குழுவினர் இன்று மீட்டனர். இந்த வழக்கில் ரச்சித் கைது செய்யப்பட்டதுடன் சுபம், சுஷாத், சுமித் ஆகியோரை பொலிஸார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.