இலங்கை வரலாற்றில் முதல் பார்வையற்ற எம்.பி: பாராளுமன்ற செயலாளர் நாயகம் வெளியிட்ட தகவல்
பார்வைக் குறைபாடுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வாவின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக விசேட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக இலங்கை பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அறிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா தேசிய மக்கள் சக்தியின் (NPP) தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இலங்கையின் முதல் பார்வையற்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.
பாராளுமன்ற உறுப்பினருக்கான ஏற்பாடுகள் தொடர்பிலான விபரங்களை வெளிப்படுத்திய குஷானி ரோஹனதீர, சபைக்குள் பிரவேசிப்பதற்கும் வெளியேறுவதற்கும் சுமூகமான பாதையை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
புதிய எம்.பி.யின் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப தொழில்நுட்ப மாற்றங்களைச் செய்து, வாக்களிப்பில் எம்.பி.யின் பங்களிப்பை உறுதி செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.
பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வாவின் பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக வாக்களிப்பதற்காக braille system மற்றும் குரல் பொறிமுறையை அறிமுகப்படுத்துவது குறித்தும் பாராளுமன்றம் பரிசீலித்து வருகிறது.
இலங்கையின் 10வது பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு 21 நவம்பர் 2024 அன்று நடைபெறவுள்ளது.