விளையாட்டு

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம்! இந்தியா – ஆஸ்திரேலியா இன்று மோதல்

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இன்று பகல் 2 மணி அளவில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகின்றன. இந்த போட்டியையொட்டி விமான சாகசம் உள்ளிட்ட கண்கவர் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி போட்டியை காண்பதற்காக மைதானத்துக்கு செல்கிறார்.

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 13-வது பதிப்பு கடந்த அக்.5-ம் தேதி கோலாகலமாக அகமதாபாத்தில் தொடங்கியது. 10 அணிகள் கலந்து கொண்ட இந்த கிரிக்கெட் திருவிழாவில் 45 லீக் ஆட்டங்கள், 2 அரை இறுதி ஆட்டங்கள் ஆகியவை நாட்டில் உள்ள 10 நகரங்களில் நடந்தன.

இந்த கிரிக்கெட் திருவிழாவில் சாம்பியன் பட்டம் வெல்வது யார்? என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி இன்று பகல் 2மணிக்கு உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. 1.30 லட்சம் பேர் அமரக்கூடிய இந்த மைதானத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

கடைசியாக இரு அணிகளும் கடந்த 2003-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் விளையாடி இருந்தன. அப்போது இந்திய அணி பட்டம் வெல்லும் வாய்ப்பை நழுவவிட்டது. ஆனால் இம்முறை இந்திய அணி பலம் வாய்ந்ததாக திகழ்வதால் அனைவரது மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. தொடர்ச்சியாக 10 ஆட்டங்களில் வெற்றி கண்டு 4-வது முறையாக இறுதிப் போட்டியை சந்திக்கிறது இந்திய அணி. அதேவேளையில் 5 முறை வாகை சூடியுள்ள ஆஸ்திரேலியா 8-வது முறையாக இறுதிப் போட்டியில் களமிறங்குகிறது.

இதற்கிடையே இறுதிப் போட்டி தொடக்க விழாவை பிரம்மாண்டான முறையில் நடத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும், பிசிசிஐயும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. பிற்பகல் 1.35 மணி முதல் 1.50 மணி வரை இந்திய விமானப்படையின் சூரிய கிரண் குழுவினர் சாகச நிகழ்ச்சிகளில் ஈடுபட உள்ளனர். சூரிய கிரண் பிரிவில் உள்ள 9 விமானங்கள் மைதானத்துக்கு மேலே உள்ள வான் பகுதியில் சாகசம் புரிய உள்ளது. உலகக் கோப்பை வரலாற்றில் விமானப்படையின் சாகசம் நடைபெற உள்ளது இதுவே முதன்முறையாகும்.

முதல் இன்னிங்ஸ் முடிவடைந்ததும் முன்னாள் சாம்பியன்களை கவுரவிக்கும் நிகழ்ச்சிக்கு பிசிசிஐ ஏற்பாடு செய்துள்ளது.

இதில் உலகக் கோப்பையை வென்ற அணிகளின் கேப்டன்கள் கவுரவிக்கப்பட உள்ளனர். இந்த நிகழ்ச்சி சுமார் 15 நிமிடங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ந்து இசையமைப்பாளர் ப்ரீதம் தலைமையில் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. பிரபல பாடகர்களான ஜோனிடா காந்தி, நகாஸ் அஸிஸ், அமித் மிஸ்ரா, ஆகாஷ சிங், துஷார் ஜோஷி ஆகியோர் கலந்து கொண்டு பாடுகின்றனர். 500 கலைஞர்களின் நடனமும் இடம் பெறுகிறது.

2-வது பேட்டிங்கின் போது 2-வது முறையாக வழங்கப்படும் குடிநீர் இடைவேளையில் 90 விநாடிகளுக்கு கண்கவரும் வகையில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற லேசர் ஷோ நடத்தப்பட உள்ளது. இறுதியாக கடைசி பந்து வீசப்படும் போதும், வெற்றி கோப்பையை சாம்பியன் கைகளில் ஏந்தும் போதும் 1,200 டிரோன்கள் கொண்டு வானில் உலகக் கோப்பை டிராபியை வண்ணமயமாக காண்பிக்க உள்ளனர்.இவற்றுடன் வாண வேடிக்கைகளும் மைதானத்தை அதிர வைக்க காத்திருக்கின்றன.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியை காண்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய துணை பிரதமர் ரிச்சர்ட் மார்லஸ் ஆகியோர் வருகை தர உள் ளனர். இவர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி, சிங்கப்பூர் உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் கே.சண்முகம், அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா ஆகியோரும் இறுதிப் போட்டியை காண்பதற்கு வருகை தர உள்ளனர்.

இதைத் தொடர்ந்து அகமதாபாத்தின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

(Visited 9 times, 1 visits today)

SR

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ