ஜெர்மனியில் வாழும் மனைவிக்கு பதிவு தபால் அனுப்பிய கணவருக்கு நேர்ந்த கதி
ஜெர்மனியில் உள்ள மனைவிக்கு பதிவு தபால் அனுப்பிய தமிழகத்தின் காஞ்சிபுரம் பிரதேசத்தை சேர்ந்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் பெரிய காஞ்சிபுரம் லிங்கப்பன் தெருவை சேர்ந்தவர் இஸ்மாயின் ஷரிப் என்பவரின் மகன் நாசர்ஷரிப் என்ற 35 வயதுடையரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இவருக்கும் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த அப்பந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் மஸ்தான்ஷரிப் மகள் ஆயிஷாபிர்தோஸ் என்பவருக்கும் கடந்த 2018ம் ஆண்டு திருமணம் நடந்தது. இருவரும் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர்.
குடும்ப தகராறு காரணமாக ஆயிஷா பிர்தோஸ் கடந்த தனது கணவரை பிரிந்து ஜெர்மன் நாட்டிற்கு வேலைக்கு சென்றுவிட்டார்.
இதேபோல், நாசர்ஷரிப்பும் பெங்களூருவில் தங்கி வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நாசர்ஷரிப், இஸ்லாமிய முறைப்படி திருமணமுறிவு செய்வதாக தெரிவித்து பதிவு தபால் மூலம் ஆயிஷாபிர்தோசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
முத்தலாக்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தபால் மூலம் தலாக் அனுப்பியதை கண்டு ஆயிஷாபிர்தோஸ் அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து ஆயிஷாபிர்தோஸ் ஜெர்மனில் இருந்து நேற்று முன்தினம் நாடு திரும்பினார். பின்னர் இதுகுறித்து ஆரணி மகளிர் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் பொலிஸார் நாசர்ஷரிபிடம் விசாரணை நடத்தினர்.
அதில் முறைப்படி விவாகரத்து பெறாமல், 2வது திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து பொலிஸார் வழக்கு பதிவு செய்து நாசர் ஷரிப், அவரது தந்தை இஸ்மாயின் ஷரிப் ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர் இருவரையும் திருவண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.