ChatGPTயை தவறாக பயன்படுத்திய சீனா இளைஞனுக்கு நேர்ந்த கதி
ChatGPTயை தவறாக பயன்படுத்தியதற்காக சீனாவில் முதல்முறையாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சீனாவில் பெரும் ரயில் விபத்து ஏற்பட்டு பலர் படுகாயமடைந்து உயிரிழந்திருப்பதாகப் போலியான செய்தி ஒன்று இணையதளங்களில் வேகமாகப் பரவி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த போலிச் செய்தி குறித்து வடமேற்கு சீனாவின் கன்சு மாகாண காவல்துறை தீவிர விசாரணை நடத்தியது.
அதைக் குறுகிய நேரத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்த்திருப்பதும் பொலிஸாருக்கு தெரியவந்தது. மேலும், ‘ஹாங்’ என்று அறியப்படும் நபர் இந்த செய்தியை வெளியிட்டுள்ளதாகக் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
பின்னர் பொலிஸார் ஹாங்கை கண்டுபிடித்து அவரது வீட்டையும், கணினியையும் சோதனை செய்து பார்த்துள்ளனர். அதில், ஹாங், விபிஎன் செயலியைப் பயன்படுத்தி ChatGPT மூலம் இந்த ரயில் விபத்து செய்தியை உருவாக்கியுள்ளார் என்ற அதிர்ச்சிகரமான தகவல் தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.
சீனாவில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்துவதற்கான விதிகள் கடந்த ஜனவரியில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டன. அதன்படி சீனாவில் தவறான செய்திகளைப் பரப்பும் குற்றங்களுக்கு சுமார் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
மேலும், AI தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்தியதற்காக சீனாவில் கைது செய்யப்பட்ட முதல் நபர் இவர்தான் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து ChatGPT மாதிரியான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை சரியாக முறைப்படுத்திக் கையாள்வதில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.