கழிவறை ஈக்களால் 8 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி – சீனாவில் அதிர்ச்சி

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள யாங்சோ நகரைச் சேர்ந்த 8 வயது சிறுமிக்கு விநோதமான உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
கழிவறை ஈக்களால் ஒரு மாதமாக உயிருடன் புழுக்களை வாந்தியெடுத்த சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஒரு மாத காலமாக, அவர் சுமார் 1 சென்டிமீட்டர் நீளமுள்ள புழுக்களை உயிருடன் வாந்தியெடுத்து வந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், பல மருத்துவர்களிடம் மகளை அழைத்துச் சென்றனர்.
ஆனால், சிறுமியின் குடும்பத்தில் வேறு யாருக்கும் இந்த பாதிப்பு இல்லாததால், நோய்த்தொற்றுக்கான காரணத்தை மருத்துவர்களால் உடனடியாகக் கண்டறிய முடியவில்லை.
சிறுமியின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்ததால், சூசோ பல்கலைக்கழக குழந்தைகள் மருத்துவமனையின் மருத்துவர்கள், புழுக்களின் மாதிரிகளை உள்ளூர் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்திற்குப் பரிசோதனைக்கு அனுப்பினர்.
பரிசோதனையின் முடிவில், இந்த விபரீதத்திற்குக் காரணம் வீடுகளில் உள்ள கழிவறைகள் மற்றும் அடைபட்ட வடிகால்களில் பெருகும் கழிவுநீர் ஈக்கள் என்பது தெரியவந்தது.
இதய வடிவிலான இறக்கைகளைக் கொண்ட இந்த ஈக்களின் புழுக்கள், நிலத்தடி நீரில் கலந்திருக்கலாம் என்றும், சிறுமி பல் துலக்கும்போதோ அல்லது கழிவறையைப் பயன்படுத்தும்போதோ தெறிக்கும் நீரின் மூலம் இந்தப் புழுக்கள் அவரது உடலுக்குள் சென்றுள்ளது.
பின்னர் அவை உடலுக்குள்ளேயே நூற்றுக் கணக்கில் வளர்ந்து வாந்தியாக வெளியே வருகிறது என்றும் நிபுணர்கள் விளக்கியுள்ளனர்.
இதுபோன்ற ஒட்டுண்ணித் தொற்றுகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்காவிட்டால், குடல் அடைப்பு, ரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு போன்ற கடுமையான உடல்நலப் பிரச்னைகள் ஏற்படக்கூடும்.
முறையான வடிகால் வசதி, வீட்டைச் சுத்தமாக வைத்திருத்தல் போன்ற சுகாதார நடவடிக்கைகளின் மூலம் பாதிப்புகளைத் தடுக்கலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.