சிங்கப்பூரில் அண்டைவீட்டுப் பெண்ணை முட்டையால் அடித்த இல்லத்தரசிக்கு நேர்ந்த கதி

சிங்கப்பூரில் அயல் வீட்டுப் பெண்ணைத் தாக்கிய 50 வயது இல்லத்தரசிக்கு 4 வாரச் சிறை தண்டனையும் 4,600 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டன.
சம்பவம் கடந்த ஆண்டு பெப்ரவரி 16ஆம் திகதி இரவு 10 மணியளவில் வெஸ்ட் கோஸ்ட் சாலையில் உள்ள தனியார் வீட்டுப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
நீச்சல்குளம் அருகே அண்டை வீட்டைச் சேர்ந்த 26 வயதுப் பெண் கயிற்றாட்டம் ஆடிக்கொண்டிருந்தார்.
ஜசிந்தா டான் சுவாட் லினால் அந்தச் சத்தத்தை பொறுத்துக்கொள்ள முடியாமல், ஒய்வெடுத்துக்கொண்டிருந்த தமது மகனுக்கு அது தொந்தரவாக இருப்பதாக அவர் எண்ணினார்.
அவர் அந்தப் பெண்ணிடம் கயிற்றாட்டம் ஆடுவதை நிறுத்துமாறு குறிப்பிட்டுள்ளார். அந்தப் பெண் நிறுத்தவில்லை. கோபமடைந்த ஜசிந்தா அவரைத் துடைப்பம், முட்டடைகள் ஆகியவற்றைக் கொண்டு தாக்கினார்.
அதனால் காயமுற்ற அந்தப் பெண் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். கைதானபின் பிணையில் வந்த ஜசிந்தா மற்றுமொரு நேரத்தில் கணவருடன் ஏற்பட்ட விவாதத்தால் அவரைக் கொல்லப்போவதாக மிரட்டினார்.
தீர்ப்பை வழங்கிய நீதிபதி, ஏற்கனவே ஜசிந்தாவுக்கு இருந்த மனநலப் பாதிப்பு அவர் நிலை தடுமாறும் அளவிற்கு மோசமானது இல்லை என்று கூறினார். அதன் அடிப்படையில் ஜசிந்தாவுக்குத் தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சிறைவாசத்தின்போது ஜசிந்தாவின் மன நலத்தை அதிகாரிகள் தொடர்ந்து கவனித்து வருவர் என்றும் நீதிபதி தெரிவித்தார்.