இலங்கையில் இளம் பெண்ணுக்கு மருத்துவரால் நேர்ந்த கதி

நீர்கொழும்பு மாவட்ட பொது மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவுக்கு சிகிச்சைக்காக வந்த இளம் பெண் ஒருவர், அங்குள்ள மருத்துவரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளானதாக முறைப்பாடு கிடைத்துள்ளது.
சிகிச்சை பெற்று வந்த இளம் பெண்ணை, குறித்த மருத்துவர் துஷ்பிரயோகம் செய்ததாக முறைப்பாட்டில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சமில் விஜேசிங்கவிடம் கேட்டபோது, குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர் அவரது சங்கத்திலிருந்து நீக்கப்பட்டதாக கூறினார்.
இந்த சம்பவம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும், சட்டம் உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
“இது தொடர்பாக நீர்கொழும்பு மருத்துவமனையிலிருந்து ஒரு அறிக்கை கோரப்பட்டது. ஒரு விடயம் தெளிவாகியது. கேள்விக்குரிய மருத்துவர் முன்பு அரசாங்க மருத்துவ அதிகாரிகளின் அரசியலமைப்பை மீறியிருந்தார்.
ஒழுக்கக்கேடான நடத்தைக்காக 2021ஆம் ஆண்டு அவர் உறுப்பினரிலிருந்து நீக்கப்பட்டார்.
இந்த சம்பவத்தை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. இந்த விவகாரத்தில் நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும்.
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றவாளிகளைப் பாதுகாக்க எந்த வகையிலும் தயாராக இல்லை. விசாரணைக்கு அதிகபட்ச ஆதரவை வழங்க நாங்கள் தயாராக உள்ளோம்” என அவர் கூறியுள்ளார்.