நெதர்லாந்தில் பரபரப்பு: நைட் கிளப்புக்கு சென்ற ஏராளமானோர் சிறைபிடித்த மர்ம நபர்கள்!
நெதர்லாந்தில் நைட் கிளப்புக்கு சென்ற ஏராளமானோரை மர்ம நபர்கள் சிறைபிடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெதர்லாந்தின் மத்திய நகரமான ஈடேவில் பெட்டிகோட் பார் என்ற நைட் கிளப்பில் ஒரு நபர் ஏராளமானோரை பணய கைதிகளாக பிடித்து வைத்துள்ளார். இதையடுத்து அங்கு சென்றுள்ள பொலிஸார், சிறைபிடிக்கப்பட்டுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்தின் அருகில் சுமார் 150 வீடுகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பு கருதி அப்பகுதியிலிருந்து பொலிஸார் வெளியேற்றியுள்ளனர்.
இந்நிலையில் பிடித்து வைக்கப்பட்டவர்களில் 3 பேர் மட்டும் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் உள்ளே எவ்வளவு பேர் சிக்கியுள்ளனர் என்பது தெரியவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தற்போது பெட்டிகோட் பார் நைட் கிளப் அமைந்துள்ள பகுதியில் ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயங்கும் ரோபோ ஒன்றை விடுதிக்குள் அனுப்ப பொலிஸார் கொண்டு வந்துள்ளதாகவும், வெடிபொருட்கள் தடுப்பு பிரிவுகள் தயார் நிலையில் இருப்பதாகவும் அந்நாட்டு ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் ஈடே நகருக்கு ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஈடே மேயர் ரெனே வெர்ஹுல்ஸ்ட் கூறுகையில், “சிறைபிடிக்கப்பட்டவர்கள் ஒரு பயங்கரமான சூழ்நிலையில் உள்ளனர். எனது கவலையும் எண்ணங்களும் அவர்களுக்கும் அவர்களின் அன்புக்குரியவர்களுக்கும் செல்கின்றன. நிலைமை விரைவாகவும் பாதுகாப்பாகவும் தீர்க்கப்படும் என நான் நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார். விடுதிக்கு சென்றவர்களை மர்ம நபர்கள் சிறைபிடித்த சம்பவம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.