ஹமாஸின் முடிவு ஆரம்பம் – இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அமெரிக்கா, எகிப்து, கத்தார் நாட்டின் வேண்டுகோளுக்கு இணங்க முதலில் 4 நாள் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. பின்னர் கூடுதலாக 2 நாட்கள் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. இந்த போர் நிறுத்தத்தை தொடர்ந்து, காசா நகர் மீது இஸ்ரேல் ராணுவம் மீண்டும் தாக்குதலை நடத்தியுள்ளது. பதிலுக்கு ஹமாஸ் அமைப்பும் இஸ்ரேல் ராணுவம் மீது தாக்குதல் நடத்தியது.
இந்த நிலையில், பாலஸ்தீனத்தின் முடிவு நெருங்கிவிட்டதாகக் கூறி, ஹமாஸ் இயக்கத்தினர் ஆயுதங்களைக் கீழே போடுமாறு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் ஹமாஸ் அமைப்பினருக்கு கூறுகையில், போர் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது, ஆனால் இது ஹமாஸின் முடிவின் ஆரம்பம். இப்போது சரணடையுங்கள். கடந்த சில நாட்களில், டஜன் கணக்கான ஹமாஸ் பயங்கரவாதிகள் எங்கள் படைகளிடம் சரணடைந்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.
ஆனால், இதுதொடர்பாக ஆதாரங்களை இஸ்ரேல் ராணுவம் வெளியிடாத நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கருத்துக்கு ஹமாஸ் அமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.