இலங்கை : வேட்பு மனுக்களை கையளிப்பதற்கான கால அவகாசம் நிறைவு!
2024ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெறும் நடவடிக்கை இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது.
இது தொடர்பான ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய பிற்பகல் 1.30 மணி வரை அவகாசம் அளித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு பொதுத் தேர்தலுக்காக 349 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.
அத்துடன், 147 அரசியல் கட்சிகளும் 94 சுயேச்சைக் குழுக்களும் நேற்றைய தினம் வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டத்தின் பிரகாரம், பொதுத் தேர்தல் தொடர்பில் ஒவ்வொரு வேட்பாளரும் செலவிட வேண்டிய பணத்தின் அளவு எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மாவட்ட செயலகங்களிலும், இராஜகிரியிலுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தைச் சுற்றியும் வேட்புமனு கையளிக்கும் காலப்பகுதியில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.
இதேவேளை, மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் ஊடாக பொதுத் தேர்தலை ஒருங்கிணைக்குமாறு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா மேலும் தெரிவித்துள்ளார்.