AIயால் ஏற்பட்டுள்ள ஆபத்து – வங்கிகளுக்கே பாதுகாப்பு இல்லை என சாம் ஆல்ட்மன் எச்சரிக்கை

செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி குறித்து ஓபன் AI நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஏஐ வேகமாக வளர்ந்து வரும் சூழலில், இது தவறான நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் ஆபத்து அதிகமாக உள்ளது என்று தெரிவித்தார்.
அதில், போலி வீடியோ, ஆடியோ மற்றும் புகைப்படங்களை மிகவும் உண்மையாக உருவாக்கும் திறனை ஏஐ பெற்றுவிட்டது என்றும், இது உண்மையையும் பொய்யையும் வேறுபடுத்த முடியாத நிலையை உருவாக்கும் என்றார்.
“யார் நம்மை அழைக்கிறார்கள், யாருடன் நாம் உரையாடுகிறோம் என்ற அடிப்படை உண்மையையே நம்ப முடியாத நிலை உருவாகக் கூடும்,” என்று ஆல்ட்மன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சூழ்நிலையை இணைய மோசடிகள், அடையாள திருட்டுகள், போலி செய்திகள் மற்றும் வங்கி பாதுகாப்பு சிக்கல்களுடன் இணைத்து பார்ப்பது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
அதனையடுத்து, செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியை சரியான பாதையில் கொண்டு செல்ல, அரசுகள், தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாம் ஆல்ட்மன் ஆலோசனை வழங்கியுள்ளார். AI ஒரு சக்திவாய்ந்த கருவி என்பதை ஏற்கவேண்டும், ஆனால் அதனை தவறாக பயன்படுத்தும் சூழலை கட்டுப்படுத்தும் சட்ட, ஒழுங்கு மற்றும் நெறிமுறைகள் நுட்பமாக உருவாக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
தகவல் தொழில்நுட்ப துறையில் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தி வரும் AI மருத்துவம், கல்வி, மென்பொருள் உள்ளிட்ட பல துறைகளில் அதிநவீன மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
முன்பு மணிநேரங்கள் தேவைப்பட்ட வேலைகளை சில விநாடிகளில் செய்து முடிக்கக்கூடிய அளவிற்கு இந்த தொழில்நுட்பம் மேம்பட்டுவிட்டது.
இதனால் மக்களுக்கு பலன்கள் இருந்தாலும், வேலையிழப்பும், மனிதனின் சிந்திக்கும் திறனில் வீழ்ச்சியும் ஏற்படும் அபாயங்கள் குறித்து நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.