உக்ரைன் அதிபரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட சீன அதிபர்..
சீன அதிபர் ஜி ஜின்பிங் தன்னுடன் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டதாக, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இதனால் உக்ரைனின் பெரும் பகுதி ரஷ்ய ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.லக நாடுகள் பலவும் போருக்கு எதிராக கண்டனம் தெரிவித்து வருகின்றன.சீனா எப்போதும் ரஷ்யாவுடனான நெருங்கிய தொடர்பிலிருந்து வருகிறது, தற்போது கூட சின அதிபர் ரஷ்யாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார்.இந்நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் தொலைபேசியில் பேசியதாக அந்நாட்டு அரசு ஊடகம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
“ஜி ஜின்பிங் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் தொலைபேசியில் அழைப்பு விடுத்தார்” என்று வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.அழைப்பின் போது சீன அதிபர் ஜெலென்ஸ்கியிடம் பேச்சுவார்த்தை தான், போரிலிருந்து வெளியேற ஒரே வழி என்று கூறியதாக அந்நாட்டின் ஊடகமான CCTV தெரிவித்துள்ளது.
உக்ரைன் மற்றும் ரஷ்யாவுடனான போரில் சீனா அதிகாரப்பூர்வமாக நடுநிலை வகித்தாலும், ரஷ்ய படையெடுப்பை சீன அதிபர் ஒரு போதும் கண்டித்ததில்லை.மேலும் ஜெலென்ஸ்கி, சீனப் பிரதிநிதியான ஜி ஜின்பிங் உடன் பேச்சுக்களுக்குத் தயாராக இருப்பதாக பலமுறை கூறியுள்ளார்.
அதிபர் ஜி ஜின்பிங்குடன் நான் நீண்ட மற்றும் அர்த்தமுள்ள தொலைபேசி உரையாடல் செய்தேன். இந்த அழைப்பும், சீனாவுக்கான உக்ரைனின் தூதர் நியமனமும் நமது இருதரப்பு உறவுகளின் வளர்ச்சிக்கு சக்திவாய்ந்த உத்வேகத்தை அளிக்கும் என்று நான் நம்புகிறேன்.’ என ஜெலென்ஸ்கி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.கடந்த பிப்ரவரியில் சீனா உக்ரைனின் நெருக்கடிக்கு அரசியல் தீர்வுக்கு அழைப்பு விடுக்கும் 12-புள்ளி அறிக்கையை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.