மோதல்களால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க மத்திய அரசு பாடுபடுகிறது
உலகளாவிய மோதல்களால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க மத்திய அரசு பாடுபடுவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஆனால், காங்கிரஸ் கட்சி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுவதாகவும் பிரதமர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அசாமின் சில்சார் நகரில் நடைபெற்ற அரச நிகழ்வில் 23,550 கோடி ரூபாவுக்கும் அதிகமான மதிப்புள்ள திட்டங்களை
ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
‘‘உலகம் முழுவதும் போர்களை எதிர்கொண்டு வரும் நிலையில், நாட்டு மக்கள் மீது அவற்றின் தாக்கத்தைக் குறைப்பதற்காக நாங்கள் தொடர்ந்து முயன்று வருகிறோம்.
காங்கிரஸ் கட்சி ஒரு பொறுப்புள்ள அரசியல் கட்சியாக செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால் அக்கட்சி அதில் இருந்து தவறிவிட்டது. மாறாக, மக்களிடையே பீதியை உருவாக்கவே அது முயல்கிறது.
அசாம் குறித்தோ அல்லது தேசம் குறித்தோ அவர்களுக்கு எந்த ஒரு தொலைநோக்குப் பார்வையும் கிடையாது. மாறாக, மோடியை அவதூறாகப் பேச வேண்டும், வதந்திகளையும் பொய்களையும் பரப்ப வேண்டும், மக்களை திசை திருப்பும் வகையில் போலியான ரீல்ஸ்களை உருவாக்க வேண்டும். இதுதான் அவர்களுக்குத் தெரியும்.
முழு உலகமும் செயற்கை நுண்ணறிவு துறை மீது மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது. டெல்லியில் இது தொடர்பாக நடைபெற்ற உச்சி மாநாடடு வெற்றிகரமாக இருந்தது. இந்த உச்சி மாநாட்டில் உலகத் தலைவர்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள், அவற்றின் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். ஆனால், காங்கிரஸ் கட்சியோ ஆடையை கிழத்துக்கொண்டு ஒரு நாடகத்தை அரங்கேற்றியது.
இதன்மூலம் நாட்டையே அக்கட்சி அவமானப்படுத்த முயன்றது. ஒட்டுமொத்த நாட்டு மக்களும் இந்த ஆபாச போராட்டத்தைக் கண்டித்தார்கள். ஆனால், காங்கிரஸின் ராஜ குடும்பம் மட்டும் தங்கள் செயலை நினைத்து தங்களுக்குத் தாங்களே முதுகில் தட்டிக்கொடுத்துப் பாராட்டிக்கொள்கின்றனர். காங்கிரஸ் கட்சியிடம் தங்கள் சொந்த ஆடைகளைக் கிழித்துக்கொள்வதைத் தவிர வேறு எதுவும் மிச்சமில்லை” என்றார்.





