நாட்டின் பிரதமர் பெயரை அறிந்திருக்காததால் மணமகனுடன் உறவை முறித்துக் கொண்ட மணமகள்!
நாட்டின் பிரதமர் பெயரை கூட மணமகன் அறிந்திருக்காததால், அவருடனான திருமண உறவை மணமகள் முறித்துக் கொண்டார். இதற்கிடையே புது மாப்பிள்ளையின் தம்பியுடன் அந்தப் பெண்ணுக்கு மீண்டும் திருமணம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
உத்தரபிரதேச மாநிலம் காஜிபூர் அடுத்த நசிர்பூர் கிராமத்தில் வசிக்கும் சிவசங்கர் ராம் என்பவருக்கும், கரண்டாவைச் சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த சில தினங்களுக்கு முன் திருமணம் நடந்தது. குடும்ப பழக்க வழக்கத்தின்படி திருமண ஊர்வலம் நடந்தது. மணமகனின் வீட்டிற்கு மணப்பெண்ணை அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது. மணமகளின் உறவினர் ஒருவர், புது மாப்பிள்ளையிடம் சில கேள்விகளை கிண்டலாக கேட்டார். சில கேள்விகளுக்கு மணமகன் பதிலளித்தார். அப்போது மற்றொரு உறவினர், ‘பிரதமரின் பெயர் என்ன?’ என்று கேட்டுள்ளார்.
அதற்கு புது மாப்பிள்ளையால் பதிலளிக்க முடியவில்லை. பிரதமர் மோடியின் பெயரை அறிந்திருக்கவில்லை என்று புது மாப்பிள்ளையிடம் அவர்கள் கோபித்துக் கொண்டனர். மேலும் நாட்டின் பிரதமர் பெயரை கூட தெரிந்து கொள்ளாமல் இருக்கிறறாரே? என்று வருத்தமும் அடைந்தனர். இதையறிந்த மணப்பெண்ணும் அதிர்ச்சியடைந்தார். இதைத் தொடர்ந்து, குறைந்தபட்ச பொது அறிவு கூட இல்லாத சிவசங்கர் ராமுடன் தன்னால் வாழ முடியாது என்று மணமகள் கூறினார்.
அவரது கருத்தை உறவினர்களும் ஆமோதித்தனர். மணமகனின் தந்தைக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஒருகட்டத்தில் தனது மூத்த மகனின் வாழ்க்கை இப்படியாகி விட்டதே என்று எண்ணிய அவர், புதுமாப்பிள்ளையின் தம்பியும் தனது இளைய மகனுடன் அந்த பெண்ணுக்கு மீண்டும் திருமணம் செய்து வைக்க கோரினார். ஆனால் பெண் வீட்டார் சம்மதிக்கவில்லை.அங்கிருந்த ஊர் பெரியவர்கள் ஒன்று கூடி, பெண் வீட்டாரை மிரட்டி புதுமாப்பிள்ளையின் தம்பிக்கு அந்தப் பெண்ணை மீண்டும் திருமணம் செய்து வைத்தனர்.
ஆனால் பிரச்னை தீர்ந்தபாடில்லை. இருதரப்பினரும் சைத்பூர் பொலிஸில் புகார் அளித்தனர். இருதரப்பினரையும் அழைத்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதலில் தாலி கட்டிய கணவருடன் செல்வதா? அல்லது இரண்டாவது தாலி கட்டிய கணவரின் தம்பியுடன் செல்வதா? என்ற குழப்பத்தில் மணப்பெண் உள்ளார். இவ்விவகாரம் உத்தரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.