வெறுங்காலில் நடந்தால் உடலில் ஏற்படும் நன்மைகள்!
தற்போதைய சூழலில் வெறுங்காலால் நடப்பவர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. நகர்ப்புறங்கள் மட்டுமின்றி, கிராமப் புறங்களிலும் மக்கள் வெறுங்காலுடன் நடப்பதில்லை. ஆனால், வெறுங்காலால் நடக்கும் போது நமக்கு பல்வேறு நன்மைகள் உருவாகும் என பல வல்லுநர்கள் கூறுகின்றனர்.
பல வெளிநாட்டவர் வெறுங்காலுடன் நடக்கும் வழக்கத்தை இன்றளவும் கடைபிடித்து வருகின்றனர். குறிப்பாக, புல்வெளிகள், மணல் பரப்புகள் போன்ற பாதுகாப்பான இடங்களில் வெறுங்காலால் நடக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெறுங்காலுடன் நடப்பது இயற்கையுடன் இணைந்து இருப்பது போன்ற உணர்வை நமக்கு கொடுக்கும். ஆஸ்திரேலியர்கள் இயற்கை மீது மிகுந்த மரியாதை கொண்டவர்களாக அறியப்படுகிறார்கள். வெறுங்காலுடன் நடப்பதன் மூலம் இயற்கையுடன் இணைந்திருப்பதை உணர்வதாக அவர்கள் கூறுகிறார்கள்.
வெறுங்காலுடன் நடக்கும் போது பாதங்களில் உள்ள நரம்பு மண்டலங்கள் தூண்டப்படும் என அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. கால்களுக்கும், நரம்புகளுக்கும் அழுத்தத்தை கொடுத்து இயக்குவதன் மூலம் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. மன அழுத்தம் இல்லாத சூழலை ஏற்படுத்த வெறுங்காலுடன் நடப்பது உதவுகிறது.