அமைச்சர் டிரனுக்கு எதிராக சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை
பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸை அந்தப் பதவியில் இருந்து நீக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
குற்றவாளிகளை ஒடுக்குவதற்கு துப்பாக்கிகளை பயன்படுத்தத் தயங்கக் கூடாது என மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் அண்மையில் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் சட்டத்தரணிகள் சங்கம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் பொதுக்குழுவிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக சங்கம் இன்று (29) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அண்மையில், இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது, குற்றக் கும்பல்களை ஒடுக்க துப்பாக்கிகளைப் பயன்படுத்தத் தயங்க வேண்டாம் என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் காவல்துறை அதிகாரிகளிடம் கூறினார்.
இந்த அறிக்கை குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்திய இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், பொது பாதுகாப்பு அமைச்சருக்கு எதிராக தனது பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
நீதிமன்ற நடவடிக்கையின்றி தன்னிச்சையான தண்டனையை ஊக்குவிக்கும் அறிக்கையை அமைச்சர் வெளியிட்டதாக குற்றம் சாட்டியுள்ளது.
இந்த அறிக்கையை அமைச்சர் டிரன் அலஸ் உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் தொடர்ந்தும் கவனக்குறைவாக அறிக்கைகள் விடுப்பதால், அவர் இனியும் அந்த அமைச்சுப் பதவியை வகிக்கத் தகுதியற்றவர் என்பதைக் காட்டுவதால், பொதுப் பாதுகாப்பு அமைச்சர் பதவியிலிருந்து அவரை உடனடியாக நீக்குமாறு சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கிறது.
பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தற்போது வெளிநாட்டில் உள்ளதாகவும், இது குறித்து அமைச்சரின் சிரேஷ்ட அதிகாரியொருவரிடம் கேட்ட போது, அமைச்சருக்கும் சில சட்டத்தரணிகளுக்கும் இடையில் கடந்த சில மாதங்களாக கடும் கருத்து மோதல் நிலவி வருவதாக தெரிவித்தார்.
பிரபல சட்டத்தரணிகள் பலர் போதைப்பொருள் கடத்தல்காரர்களை பிரதிநிதித்துவப்படுத்தி இலட்சக்கணக்கான பணத்தை பெற்றுக்கொள்வதாக தெரியவந்துள்ளதாக அமைச்சர் கூறியமையே இதற்கு காரணம் என அவர் குறிப்பிடுகின்றார்.
இதே வேளை, நீதி நடவடிக்கைக்கு எதிராக போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளை அம்பலப்படுத்தும் விசேட பிரச்சாரம் நாளை முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.