இஸ்ரேலுக்கு ரகசிய தகவல் வழங்கிய பாலஸ்தீனியர்கள் இருவரை கொலைசெய்து கம்பத்தில் தொங்கவிட்ட ஆயுதக்குழு
இஸ்ரேல் பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கொடுத்ததாக பாலஸ்தீனியர்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த அக்டோபர் மாதம் 7ஆம் திகதியில் இருந்து இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் நடந்து வருகிறது.இதுவரை காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 14,800 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் இஸ்ரேலில் 1,200 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு நாட்கள் போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இரு தரப்பில் இருந்தும் பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள வீடியோ ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலுக்கு ரகசிய தகவல் அளித்ததாக பாலஸ்தீனியர்கள் இருவர் ஆயுதமேந்திய குழுவால் தாக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் இருவரும் இஸ்ரேல் பாதுகாப்புப் படையில் (IDF) பணிபுரிந்ததாக அந்த வீடியோவில் ஒப்புக்கொண்டிருக்கின்றனர். அதன் பின்னர் அவர்கள் கொல்லப்பட்டு மின்கம்பத்தில் கட்டித் தொங்கவிடப்பட்டுள்ளனர்.எனினும் ஹமாஸ் அல்லது IDF மரணதண்டனை பற்றி முறையான அறிக்கைகள் எதையும் வெளியிடவில்லை.