ChatGPTயின் Android பதிப்பு அடுத்த வாரம் வெளியீடு!
OpenAI நிறுவனம் ChatGPT-ன் Android பாதிப்பை விரைவில் வெளியிடப் போவதாகத் தெரிவித்துள்ளது.
ChatGPT அதன் அறிமுகத்திற்குப் பிறகு அதிவிரைவாக 100 மில்லியன் பயனர்களை எட்டிய சேட் பாட் என்ற சாதனையை செய்தது.
அதன்படி பேஸ்புக், ஸ்னாப் சாட் மற்றும் மைஸ்பேஸை இது முந்தியது. கடந்த சில மாதங்களாகவே GPT-3.5 மற்றும் GPT-4 போன்ற பெரிய மொழி மாடல்களில் இயங்கும் தொழில்நுட்பமாக ChatGPT இருந்துவருகிறது.
உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான நபர்கள் இதைத் தற்போது பயன்படுத்தி வருகின்றனர். மனிதர்களைப் போலவே உரையாடுவது பதில் சொல்வது என AI துறையில் ChatGPT ஒரு மைல்கல்லாகவே கருதப்படுகிறது.
ChatGPT வெளிவந்ததிலிருந்தே பல வியக்கத்தக்க விஷயங்களை செய்து வருகிறது. தினசரி ChatGPT பற்றி ஏதாவது ஒரு செய்தியை நாம் படித்துவிடுகிறோம்.
இது கடந்த நவம்பர் 2022ல் தொடங்கப்பட்ட நிலையில், AI-ல் இயங்கும் இந்தச் சாட் பாட்டின் மொபைல் வெர்ஷன் மே மாதம் iOSல் வெளியானது. அச்சமயத்தில் இதை அதிகமான ஐபோன் பயனர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தினர்.
இது எப்போது ஆண்ட்ராய்டு போன்களுக்கு வரும் என எதிர்பார்த்திருந்த நிலையில், OpenAI நிறுவனம், அதன் பிரபலமான ChatGPT ஆண்ட்ராய்டு பதிப்பில் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது. இதன் மூலமாக ஆண்ட்ராய்டு பதிப்பில் வரும் ChatGPT-ஐ உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான பயனர்கள் அணுகக்கூடிய வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்த அறிவிப்பை OpenAI தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கில் வெளியிட்டது. இந்த செயலி அடுத்த வாரம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வெளியிடப்படும் என்றும், இன்று முதல் கூகுள் பிளே ஸ்டோரில் இதை முன்கூட்டியே ஆர்டர் செய்யலாம் என்றும் OpenAI தெரிவித்துள்ளது.
ChatGPT-ன் ஆண்ட்ராய்டு பதிப்பு ஓப்பன் எஐ நிறுவனத்தின் சமீபத்திய முன்னேற்றங்களை உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான பயனர்களின் விரல் நுனியில் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இதைப் பயனர்கள் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது ChatGPT-ல் செய்யப்படும் புதிய மேம்பாடுகள் அனைத்தும் ஆண்ட்ராய்டு வெர்ஷனிலும் கிடைக்கும்.