பாலஸ்தீன சிறுவனை 26 தடவை குத்தி கொலை செய்த அமெரிக்க முதியவர்!
 
																																		பாலஸ்தீன சிறுவனை 26 தடவை கத்தியால் குத்தி அமெரிக்க முதியவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் சிகாகோவில் இருந்து தென்மேற்கே 65 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பகுதியில் 32 வயது இஸ்லாமிய பெண் தனது 6 வயது மகனுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இவர்கள் இருவரும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது 71 வயது மதிப்புள்ள முதியவர் ஒருவர் வீட்டுக்குள் கத்தியுடன் புகுந்துள்ளார். அப்போது, திடீரென வீட்டில் இருந்த பெண்ணையும் அவரது மகனையும் வெறித்தனமாக முதியவர் கத்தியால் தாக்கினார். 6 வயது சிறுவனை அவர் தொடர்ந்து கத்தியால் குத்திக்கொண்டே இருந்தார். இதில் அவனது உடலில் 26 இடங்களில் கத்திக்குத்து காயம் ஏற்பட்டது. இதனால் ரத்த வெள்ளத்தில் அவன் கீழே சரிந்தான்.
இதைப்பார்த்த அந்த பெண் தனது மகனை காக்க போராடியுள்ளார். அப்போது, அவரையும் முதியவர் கத்தியால் குத்தியுள்ளார். அவரிடம் இருந்து தப்பிக்க அந்த பெண் வீட்டு குளியல் அறைக்குள் ஓடினார். ஆனாலும் அந்த முதியவர் அவரை விடவில்லை. கத்தியால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் படுகாயத்துடன் உயிருக்கு போராடிய அவர் செல்போன் மூலம் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்.

மேலும், தனது கணவருக்கும் செல்போனில் தகவல் அனுப்பினார். இதுபற்றி அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணையும், சிறுவனையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். மருத்துவ பரிசோதனையில் சிறுவனின் உடலில் கத்தி இருந்தது தெரியவந்தது. சிறுவனின் தாய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஜோசப் சுபா என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில், நில உரிமையாளராக இருந்து வரும் ஜோசப், இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பினர் இடையே நடந்து வரும் சண்டையின் எதிரொலியாக அமெரிக்காவில் வசித்து வந்த வந்த பாலஸ்தீனத்தை சேர்ந்த சிறுவனை குத்திக்கொன்றது தெரியவந்துள்ளது.
 
        



 
                         
                            
