வெற்றி விழாவில் அதிபர் புதின் சொன்ன அந்த ஒரு வார்த்தை., உற்று நோக்கும் உலக நாடுகள்
ரஷ்யாவின் வெற்றி விழா அணிவகுப்பில் கலந்து கொண்ட ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் போர் குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். மேலும், மேற்கத்திய நாடுகளையும் அவர் கடுமையாகச் சாடினார்.
இதுவரை இல்லாத அளவுக்கு ரஷ்யா மீது உலக நாடுகள் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. உண்மையில் இதை ரஷ்யா துளியும் எதிர்பார்க்கவில்லை. இதனால் ரஷ்யாவின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் கோபமும் இப்போது அதிகரித்து வரும் நிலையில், நிலைமையைச் சமாளிக்க புதின் பல முயற்சிகளை எடுத்து வருகிறார்.
இந்த நிலைக்கு மேற்கத்திய நாடுகளே காரணம் என்று அவர் சாடி விமர்சித்து வருகிறார். இதனிடையே அங்கே நடந்த வெற்றி தின அணிவகுப்பு நிகழ்வில் பேசிய புதின் சில பரபர கருத்துகளைத் தெரிவித்துள்ளார். மாஸ்கோவின் ரெட் ஸ்கொயர் வெற்றி தின அணிவகுப்பில் பேசிய புதின், ஒட்டுமொத்த உலகமும் தங்களுக்கு எதிராக உள்ளதாகவும் ரஷ்யாவிற்கு எதிராகப் போர் கட்டவிழ்த்து உள்ளதாகவும் சாடியுள்ளார்.
வெற்றியை உறுதியளித்த அவர், உக்ரைனில் போரிடம் அதன் வீரர்களின் கையில் தான் ரஷ்யாவின் எதிர்காலம் உள்ளது என்றும் தெரிவித்தார். உக்ரைன் போர் ஆரம்பித்து 15 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், ஜெர்மனியின் நாஜிக்கள் படைகளை வீழ்த்தியதைக் கொண்டாடும் இந்த நிகழ்வில் புதின் பேசியது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.ரஷ்ய அதிபர் புதின் மேற்குலக நாடுகள் நாசிசத்தினை உருவாக்க முயல்வதாகச் சாடியுள்ளார். இப்போது நாம் மிகவும் இக்கட்டான ஒரு சூழலில் இருக்கிறோம். மேற்கத்திய நாடுகள் தரும் நெருக்கடியை உக்ரைன் சண்டைக்குக் காரணமாக இருக்கிறது.. மேற்கத்திய நாடுகளின் உக்ரைன் ஆதரவு நிலைப்பாடே இந்த சூழலை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவைத் தாக்கத் தயாராகி வரும் மேற்கத்திய நாடுகள், இரண்டாம் உலகப் போரின் முடிவுகளை மாற்ற முயல்வதாகவும் அவர் சாடினார். மேலும், “எங்கள் தாய்நாட்டிற்கு எதிராக ஒரு போர் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். ரஷ்யா வெற்றி பெற நாம் அனைவரும் ஒரே அணியில் திரண்டு நிற்க வேண்டும். ரஷ்ய வீரர்கள் கடுமையாகப் போராட வேண்டும். இப்போது நம்மிடம் இருந்து அது மட்டுமே தேவை. நாட்டின் பாதுகாப்பை நீங்கள் தான் உறுதி செய்ய வேண்டும். ரஷ்யாவின் எதிர்காலம் உங்களைத் தான் நம்பி இருக்கிறது.
சில குறிப்பிட்ட மேற்கத்திய நாடுகள் திட்டமிட்டு உலகெங்கும் மோதல்களைத் தூண்டிவிட்டு, சதி செய்கிறார்கள். இங்கே நமது நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி அழிக்க வேண்டும் என்பதை அவர்களின் குறிக்கோளாக இருக்கிறது. இதை நாம் எப்படியாவது முறியடிக்க வேண்டும். நாங்கள் ஏற்கனவே சர்வதேச பயங்கரவாதத்தை முறியடித்துள்ளோம், நாங்கள் கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் மக்களைப் பாதுகாப்போம். இதை அனைத்து பகுதி மக்களையும் நிச்சயம் பாதுகாப்போம்” என்று அவர் தெரிவித்தார்.