தாய்லாந்து – பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணியின் மரணத்திற்குப் பிறகு மாயமான காளான் விற்பனையாளரை கைது செய்த பொலிஸார்
தாய்லாந்தின் சியங் மாய் மாநிலம், முவாங் மாவட்டத்தில் காவல்துறை, பொதுச் சுகாதாரத்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 24) நடத்திய அதிரடிச் சோதனையில், வெளிநாட்டு ரகசிய முகவர் ஒருவரைக் கொண்டு கடை ஒன்றிலிருந்து போதைக் காளான்களை வாங்க வைத்தனர்.
அந்த முகவர், 500 பாட் (S$20) கொடுத்து ஒரு பை காளான்களை வாங்கினார். அதைத் தொடர்ந்து, அந்தக் கடையில் அதிரடிச் சோதனை நடத்திய அதிகாரிகள், அதன் உரிமையாளரைக் கைது செய்தனர். பால் என்று அழைக்கப்படும் அந்த உரிமையாளர்மீது ‘பிரிவு 5’ போதைப்பொருள்களை அனுமதியின்றி வைத்திருந்து அவற்றை விற்றது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
போதைக் காளான்கள் என்று பொதுவாக அழைக்கப்படும் ‘சிலோசைபின்’ காளான்கள் பேரளவில் பறிமுதல் செய்யப்பட்டன.
தம் காதலியுடன் சேர்ந்து சியங் மாய் சென்ற 25 வயது பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணி வாதர் ராஜ் அகில், டிசம்பர் 20ஆம் திகதி உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பிரபல சுற்றுலாத் தலமான தா பே கேட்டில் புகைப்படங்கள் எடுத்துக்கொண்ட பிறகு, அருகில் இருந்த கடை ஒன்றிலிருந்து போதைக் காளான்களை அந்த இணையர் வாங்கினர்.
காளான்களை உட்கொண்ட 40 நிமிடங்களில், ராஜும் அவரின் காதலியும் தங்கியிருந்த உல்லாச விடுதியில் ராஜின் வாயிலிருந்து நுரை தள்ளியது.
காளான்களின் அளவுக்கு அதிக போதை ஏறி அவர் இறந்துவிட்டதாக விசாரணையில் தெரியவந்தது. அந்தக் காளான்கள் பாலின் கடையில் வாங்கியதை ராஜின் காதலி ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, அதிகாரிகள் அக்கடையில் அதிரடிச் சோதனை நடத்தி பாலைக் கைது செய்தனர்.