ஒரே பாலினத் திருமண மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவுள்ள தாய்லாந்து செனட்
ஒரே பாலினத் திருமண மசோதாவை நிறைவேற்ற தாய்லாந்தின் செனட் சபை விரைவில் ஒப்புதல் தரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மசோதாவின் நிலவரம் குறித்து ஜூன் 18ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) தெளிவான தகவல் வெளியாகும் என்று கூறப்படுகிறது. மசோதா சட்டமாகும் பட்சத்தில் தென்கிழக்காசிய நாடுகளில் ஒரே பாலினத் திருமணத்திற்கு ஒப்புதல் வழங்கிய முதல் நாடாக தாய்லாந்து இருக்கும்.
மசோதா நிறைவேற்ற தேவையான பணிகள் முடிந்துவிட்டதாக தாய்லாந்து அரசாங்கத்தின் துணைப் பேச்சாளர் ஞாயிற்றுக்கிழமையன்று (ஜூன் 16) தெரிவித்தார்.
மசோதாவுக்கு செனட் சபை ஒப்புதல் வழங்கிய பிறகு அது அமைச்சரவைக்கு ஒப்புதலுக்கு செல்லும். அமைச்சரவை ஒப்புதல் அளித்த பிறகு அது மன்னரின் ஒப்புதலுக்கு எடுத்து செல்லப்படும்.
செனட் மற்றும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கிவிட்டாலே அது கிட்டத்தட்ட சட்டமாக மாறிவிடும்.
கடந்த மார்ச் மாதம் தாய்லாந்தின் பிரதிநிதிகள் சபையில் நடந்த வாக்கெடுப்பில் ஒரே பாலினத் திருமண மசோதாவுக்கு பெரிய அளவில் ஆதரவு கிடைத்தது.
ஜூன் 18ஆம் திகதி செனட் சபையில் மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்தால் அன்று மாலை பேங்காக் வர்த்தக வட்டாரத்தில் பெரிய அளவில் கொண்டாட்டங்களை நடத்த தாய்லாந்து அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒரே பாலினத் திருமணத்திற்கு உலக அளவில் கிட்டத்தட்ட 40 நாடுகள் ஒப்புதல் வழங்கியுள்ளன. ஆசியாவில் தைவான், நேப்பாளம் ஒப்புதல் வழங்கியுள்ளன.