அரச வைத்தியசாலையில் டெஸ்ட் ட்யூப் பேபி சிகிச்சை – வரலாற்று முன்னேற்றம்
இலங்கையில் முதல் முறையாக அரச வைத்தியசாலையில் ‘டெஸ்ட் ட்யூப் பேபி’ சிகிச்சை (IVF) அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
கொழும்பு காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் இந்த புதிய வசதி முன்னெடுக்கப்படவுள்ளது
இந்த சிகிச்சை அடுத்த மூன்று மாதங்களுக்குள் நடைமுறைக்கு வரும் என காசல் வீதி மகளிர் வைத்தியசாலையின்
பணிப்பாளர் டொக்டர் அஜித் குமார தந்தநாராயண தெரிவித்துள்ளார்.
இது அரச சுகாதார சேவையில் ஒரு முக்கிய முன்னேற்றம் என்றும் அவர் கூறினார்.
தற்போது இலங்கையில் சில தனியார் வைத்தியசாலைகளில் மட்டுமே டெஸ்ட் ட்யூப் பேபி சிகிச்சை வழங்கப்படுகிறது.
இதற்கான செலவு ஒரு சுழற்சிக்கு 20 இலட்சம் ரூபா முதல் 30 இலட்சம் ரூபா வரை உள்ளது.
இதனால் பல தம்பதிகள் இந்த சிகிச்சையை பெற முடியாத நிலை காணப்படுகிறது.
இந்நிலையில் இந்த புதிய அரச வைத்தியசாலை வசதி மூலம், தனியார் சிகிச்சைக்கான செலவுகளைச் செலுத்த முடியாத தம்பதிகளுக்கும் பெற்றோராகும் கனவை நிறைவேற்ற வாய்ப்பு கிடைக்கும் என வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
IVF என்பது ஆய்வகத்தில் ஆண் விந்தணுவுடன் பெண் முட்டையுடன் இணைத்து, அதன் பின்னர் கருப்பையில் மாற்றும் மருத்துவ முறையாகும்.
முட்டை குழாய் அடைப்பு, குறைந்த விந்தணு எண்ணிக்கை, ஹார்மோன் கோளாறுகள் மற்றும் காரணம் தெரியாத குழந்தையின்மை போன்ற பிரச்சனைகளுக்கு இந்த சிகிச்சை பயன்படுத்தப்படுகிறது.
குழந்தையின்மை பிரச்சனை அதிகரித்து வரும் நிலையில், அரசு துறையில் இந்த சிகிச்சை அறிமுகப்படுத்தப்படுவது பல தம்பதிகளுக்கு பெரும் நம்பிக்கையைக் கொடுக்கும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.





