ஹோட்டலுக்குள் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த பயங்கரவாதிகள்…!
சோமாலியா தலைநகர் மொகதிசுவில் கடற்கரை ஹோட்டல் ஒன்றில் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த தீவிரவாதிகளால் பலர் மரணமடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி சுமார் 12 மணி நேரம் நீண்டுள்ளது தீவிரவாதிகளின் கதிகலங்க வைக்கும் முற்றுகை. தகவல் அறிந்து சம்பவ இடத்தில் திரண்ட ராணுவம் மற்றும் பொலிஸாரால் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் என 84 பேர்கள் அந்த ஹொட்டலில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டனர்.
உள்ளூர் பத்திரிகை ஒன்று வெளியிட்ட தகவலில், 7 பேர் கொண்ட பயங்கரவாதிகள் குழுவே இந்த இரக்கமற்ற தாக்குதலை முன்னெடுத்ததாக குறிப்பிட்டுள்ளது. அத்துடன், கடற்கரையில் அமைந்துள்ள விடுதி ஒன்றும் மொத்தமாக சேதப்படுத்தப்பட்டுள்ளது.மேலும், தாக்குதல் சம்பவத்தில் ஹோட்டல் ஜன்னல்கள் சேதமடைந்துள்ளதுடன், நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் நொறுங்கியுள்ளது. இந்த நிலையில் 9 பேர்கள் கொல்லப்பட்டு, 10 பேர் காயமடைந்துள்ள தொடர்புடைய சம்பவத்திற்கு அல்-கொய்தாவின் கிழக்கு ஆபிரிக்க துணை அமைப்பான அல்-ஷபாப் பொறுப்பேற்றுள்ளது.
மொகதிசு நகரில் ஹோட்டல் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் இதுபோன்று தாக்குதல் முன்னெடுப்பதை அல்-ஷபாப் அமைப்பு தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. சுமார் 12 மணி நேரம் நீடித்த முற்றுகையை சோமாலியா பாதுகாப்பு படையினர் முடிவுக்கு கொண்டுவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் ஏழு பேரும் கொல்லப்பட்டதாகவே தகவல் வெளியாகியுள்ளது. தொடர்புடைய ஹோட்டலானது அரசாங்க அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு பயணிகள் தங்கள் சந்திப்புகளுக்கு பொதுவாக பயன்படுத்தி வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.