பாகிஸ்தானில் பலூசிஸ்தான் பகுதியில் உள்ள சிறையைத் தகர்க்க தீவிரவாதிகள் முயற்சி…15 பேர் சுட்டுக்கொலை!
பாகிஸ்தானில் சிறையைத் தகர்க்கும் முயற்சியாக, தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் உட்பட 15 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் தென்கிழக்கு மாகாணங்களில் ஒன்றான பலூசிஸ்தான் பகுதியில் மாக் என்ற இடத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு கொண்ட சிறைச்சாலை ஒன்று அமைந்துள்ளது. கடந்த 29 மற்றும் 30ம் திகதிகளில் இந்த சிறைச்சாலையை தகர்க்கும் முயற்சியாக, துப்பாக்கிகள், சிறிய ரக ராக்கெட்டுகள், கையெறி குண்டுகள் உள்ளிட்ட கனரக ஆயுதங்கள் கொண்டு தொடர் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளது.
தீவிரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலில், 4 பாதுகாப்பு படை வீரர்கள், 2 பொதுமக்கள் உட்பட 15 பேர் இதுவரை உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் உயிரிழந்த 9 பேர் தீவிரவாதிகள் எனக் கண்டறியப்பட்டுள்ளதாகவும், மாக் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள பயங்கர தீவிரவாதிகளை விடுவிக்கும் முயற்சியில் இந்த தாக்குதல் நடைபெற்று இருக்கலாம் எனவும் அந்நாட்டு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதுகாப்பு பணிகளை மேலும் தீவிரப்படுத்தி உள்ளனர். உயிரிழந்த 9 பேரில், 3 பேர் தற்கொலைப் படையை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. குறைந்தது 15க்கும் மேற்பட்ட சிறிய ரக ராக்கெட்டுகள் சிறைச்சாலை வளாகத்தின் மீது ஏவப்பட்டு இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் காரணமாக அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.