உகண்டாவில் பாடசாலை மீது பயங்கரவாதிகள் தாக்குதல் – 40பேர் பலி
உகாண்டாவில் உள்ள பள்ளி ஒன்றில் கிளர்ச்சியாளர்கள் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் தாக்குதலில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டனர், அவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு உகாண்டா. இந்நாட்டின் அருகே காங்கோ நாடு அமைந்துள்ளது. இந்த இரு நாடுகளில் IS பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான ஜனநாயக கூட்டணி படை என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது.
இந்த பயங்கரவாத அமைப்பு பொதுமக்கள், பாதுகாப்பு படையினரை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், காங்கோ எல்லையோரம் உள்ள உகாண்டாவின் பொண்ட்வி நகரில் உள்ள கிராமத்தில் ஒரு பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளிக்கூடம் மீது கடந்த வெள்ளிக்கிழமை இரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.இந்த தாக்குதலில் 40 பேர் உயிரிழந்தனர்.
தாக்குதல் நடந்த நகரத்தின் மேயர், இதுவரை 38 மாணவர்கள் உட்பட 41 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.