ஹரியாணாவில் பயங்கர சம்பவம்… சைக்கிளில் சென்றவரை 2 கி.மீ இழுத்துச் சென்ற வேன்!
ஹரியாணாவில் சைக்கிளில் சென்றவர் மீது மோதி 2 கி.மீ தூரம் வேன் இழுத்துச் சென்றதால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். நெஞ்சை பதற வைக்கும் இந்த வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஹரியாணா மாநிலம், பன்னிவாலா மோட்டா கிராமத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் தான் இந்த கொடூரச் சம்பவம் நடைபெற்றுள்ளது. அதிவேகமாக வந்த பிக்கப் வேன், அவ்வழியே சைக்கிளில் சென்றவர் மீது மோதியது. இதில் கீழே விழுந்தவரை இழுத்துக் கொண்ட அந்த பிக்கப் வேன், படுவேகமாக சென்றது. இதை அந்த வழியே வந்த டிரக் ஓட்டுநர், பிக்கப் வேனை நிறுத்தச் சொல்லி ஹாரனை அடித்தார்.
ஆனால், வாகனத்தை நிறுத்தாததுடன், சைக்கிளில் வந்தவரை இழுத்துக் கொண்டு பிக்கப் வேன் படுவேகமாக செல்ல ஆரம்பித்தது. இதனைப் பார்த்த டிரக் ஓட்டுநர், பிக்கப் வேனை துரத்த ஆரம்பித்தார். ஆனால், வேகத்தை குறைக்காமல் பிக்கப் வேன் ஓட்டுநர் ஓட்ட ஆரம்பித்தார்.
ஆனால், அந்த பிக்கப் வேனை விடாமல் டிரக் ஓட்டுநர் துரத்தி மடக்கினார். இதன் பின் டிரக் ஓட்டுநர் மற்றும் அதில் இருந்து இறங்கியவர்கள், பிக்கப் வேனை நிறுத்தினர். அப்போது அதற்கு அடியில் சிக்கியிருந்தவரை காயத்துடன் வெளியே இழுத்தனர். அவர் மூச்சு பேச்சற்றுக் கிடந்ததால், ஆத்திரமடைந்த டிரக் ஓட்டுநர், பிக்கப் வேன் ஓட்டுநரையும், அதில் வந்தவரையும் தாக்கினார். இந்த அதிர்ச்சிகரான வீடியோ சமூக வலைதளங்களில் இன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சைக்கிளில் வந்தவர் குர்னாம் சிங் என்பது தெரிய வந்தது. அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக குர்னாம் சிங்கின் உறவினர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பிக்கப் வேன் ஓட்டுநர் மீது கொலைவழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.