ஈரான் கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க போர்க்கப்பலால் பதற்றம்!

ஈரான் கடல் பகுதிக்குள் அமெரிக்க போர் கப்பல் அத்துமீறியதாக ஈரான் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஈரானின் அரசு தொலைக்காட்சி கூறியதாவது:-
ஓமன் வளைகுடா பகுதியில் ஈரான் கடல்வழி பகுதிக்குள் அமெரிக்க போர்க்கப்பலான யு.எஸ்.எஸ். பிட்ஸ்ஜெரால்டு அத்துமீறி நுழைய முயன்றது.
இதனையடுத்து, ஈரானிய படையை சேர்ந்த ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டு சென்று அமெரிக்க போர் கப்பலை எதிர்கொண்டது. அந்த ஹெலிகாப்டர் அமெரிக்க கப்பலின் மீது நேரடியாகப் பறந்து சென்றது.
ஈரான் கடல்பகுதியில் இருந்து விலகி செல்ல எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அப்போது ஈரான் ஹெலிகாப்டர் அந்த பகுதியை விட்டு செல்லவில்லை என்றால், அதனை இலக்காக கொள்ள வேண்டியிருக்கும் என அமெரிக்க கப்பலில் இருந்து அச்சுறுத்தல் விடப்பட்டது.
இதற்கு பதிலளித்த ஈரான் விமான பாதுகாப்பு படையினர், அந்த ஹெலிகாப்டர், ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு திட்ட முழு பாதுகாப்பின் கீழ் உள்ளது என தெரிவித்தது. இறுதியாக, அமெரிக்க கப்பல் தெற்கு நோக்கி பின்வாங்கி சென்றது என தெரிவித்தது.
இதுதொடர்பாக அமெரிக்க மத்திய கட்டளை படை கூறும்போது, பாதுகாப்பான மற்றும் தொழில்துறையிலான உரையாடலாகவே இருந்தது என்றும் அதனால், அமெரிக்க கப்பலுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. தவறான தகவல்களைப் பரப்ப ஈரான் முயற்சிக்கிறது என்றும் தெரிவித்தது.