மத்திய கிழக்கில் பதற்றம் – இஸ்ரேலில் வாழும் அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை
ஈரான், இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல்களை மேற்கொள்ளலாம் என்ற அச்சம் உருவாகியுள்ளது.
இந்த நிலையில், அங்கு வாழும் அமெரிக்கர்கள் தங்களது பயண நடவடிக்கைகளை கட்டுப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
குறிப்பாக ஜெரூசலம், டெல் அவிவ் மற்றும் பீர்ஷெபா பகுதிகளுக்கு வெளியே பயணிக்க வேண்டாம் என அமெரிக்கா தங்களது நாட்டு பிரஜைகளைக் கோரியுள்ளது.
11 நாட்களுக்கு முன்னர் சிரியாவில் உள்ள தங்களது தூதரகத்தின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 13 பேர் பலியானமைக்கு பதில் தாக்குதல் மேற்கொள்ளப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொல்லப்பட்டவர்களில் சிரியா மற்றும் லெபனானில் உள்ள ஈரானின் உயர்மட்ட விசேட படையணியின் சிரேஷ்ட தளபதிகளும் இராணுவ உத்தியோகத்தர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூதரக தாக்குதலுக்கு இஸ்ரேல் உரிமை கோராத நிலையில், தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேலே இருந்ததாக பரவலாக கருதப்படுகின்றது.
காசாவில், இஸ்ரேலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடும் பாலஸ்தீனிய குழுவான ஹமாஸை ஈரான் ஆதரிக்கின்றது.
அத்துடன், இஸ்ரேலுக்கு எதிரான செயற்பாடுகளில் அடிக்கடி ஈடுபட்டு வரும் ஹிஸ்புல்லா போன்ற சிறிய குழுக்களுக்கும் ஈரான் தமது ஆதரவினை வழங்கி வருகின்றது.
காசாவிற்கு எதிரான யுத்தம் பிராந்தியம் முழுவதும் பரவுவதைத் தடுப்பதற்கான இராஜதந்திர நடவடிக்கைகள் முனைப்புடன் தொடரும் நிலையில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.