மணிப்பூரில் தொடரும் பதற்றம்! பொலிஸார் உட்பட 4 பேர் பலி
மணிப்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் நடந்த கலவரம் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் ஒரு பொலிஸார் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க 2 மாதங்களுக்கு முன்பு பரிந்துரை செய்யப்பட்டது. இதற்கு குகி, நாகா உள்ளிட்ட பல்வேறு இனங்களைச் சேர்ந்த பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இது கலவரமாக மாறி பலர் வேறு மாநிலங்களில் தஞ்சம் புகுந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். பொதுச் சொத்துக்களும் சேதமடைகின்றன.
விஷ்ணுபூர் மற்றும் சுரசந்த்பூர் மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு மோதல்கள் நடந்தன. பழங்குடியின தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்தார். 3 பொதுமக்கள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
தகவல் கிடைத்ததும் பாதுகாப்பு படையினர் உடனடியாக அப்பகுதியில் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. எனினும், கலவரக்காரர்கள் வனப் பகுதிகளில் மறைந்திருந்து திடீர் தாக்குதல்களை நடத்தி வருவதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்